மேட்டூர் அணை 3 வது முறையாக முழு கொள்ளளவை எட்டியது!

மேட்டூர் அணை இந்த ஆண்டில் மூன்றாவது முறையாக அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. கர்நாடகா அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் மற்றும் தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சுமார் 16 ஆயிரம் கன அடியிலிருந்து 25 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

 

நீர்வரத்து அதிகமாக இருக்கும் நிலையில் அணையிலிருந்து திறக்கக் கூடிய தண்ணீரின் அளவு குறைவாக இருப்பதால் மேட்டூர் அணை இரண்டு மாதத்தில் மூன்றாவது முறையாக 120 அடியை எட்டியுள்ளது. எனவே அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுதவிர 16 கண் மதகு வழியாக 4 ஆயிரத்து 500 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.

 

மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 250 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. முன்னதாக கடந்த மாதம் ஏழாம் தேதி மற்றும் 24ஆம் தேதி மேட்டூர் அணை நிரம்பியது. தொடர் மழையால் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள முக்கடல் அணை முழு கொள்ளளவை எட்டியது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மாவட்டத்தில் உள்ள பெருஞ்சாணி மற்றும் சிற்றாறு உள்ளிட்ட அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

 

அந்தவகையில் நாகர்கோவில் மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் முக்கடல் அணை முழு கொள்ளளவான 25 அடியை எட்டியுள்ளது. அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து கொண்டிருப்பதால் வினாடிக்கு 7.42 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது அணை நிரம்பியதால் அடுத்தாண்டு நாகர்கோவில் மாநகராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு இருக்காது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Leave a Reply