ரஜினி மக்கள் மன்றம் சார்பில் கஜா புயலில் பாதிக்கப்பட்ட 10 குடும்பத்தினருக்கு புதிய வீடுகள் – ரஜினி வழங்கினார்

கஜா புயல் பாதிப்பில் வீடுகளை இழந்த 10 குடும்பத்தினருக்கு ரஜினி மக்கள் மன்றம் சார்பில் புதிய வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. அந்தக் குடும்பத்தினருக்கு புதிய வீடுகளின் சாவிகளை நடிகர் ரஜினி வழங்கினார்.

 

கடந்தாண்டு நவம்பரில் உருவான கஜா புயல் டெல்டா மாவட்டங்களை சின்னாபின்னமாக்கி உருக்குலையச் செய்தது. தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை , நாகை மாவட்டத்தில் லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். தென்னை உள்ளிட்ட ஏராளமான மரங்களும் முறிந்து விவசாயிகளின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியானது.

 

கஜா புயலில் பாதிக்கப் பட்டோருக்கு அரசின் நிவாரண உதவிகள் கிடைக்க தாமதமான நிலையில், பல்வேறு தொண்டு நிறுவனங்கள், அமைப்புகள், திரையுலகத்தினர் மட்டுமின்றி தனி நபர்களும் தாராளமாக உதவிகள் வழங்கினர். சிலர் சொந்த செலவில், பாதிக்கப்பட்டவர்களை வீடுகளைக் கூட கட்டிக் கொடுத்தனர்.

 

இதே போல் ரஜினி மக்கள் மன்றம் சார்பில், கஜா புயலில் வீடுகளை இழந்த 10 ஏழை குடும்பத்தினருக்கு புதிய வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. இன்று சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் இல்லத்திற்கு புதிய வீடுகள் பெறும்10 குடும்பத்தினரும் வரவழைக்கப்பட்டனர். அவர்களிடம் புதிய வீடுகளுக்கான சாவிகளை ரஜினிகாந்த் வழங்கினார்.


Leave a Reply