இந்தியா-பாகிஸ்தான் இடையே எல்லையில் போர் பதற்றம் இருந்தபோதிலும், பாகிஸ்தானைச் சேர்ந்த
7 வயது குழந்தைக்கு இந்தியாவில் இதய அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது.
பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு தம்பதியின் மகளான ஏழு வயது சிறுமி, பிறக்கும் போதே இதய நோய் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருந்தார். பாகிஸ்தான் மருத்துவமனைகளில் அந்தச் சிறுமிக்கு உரிய சிகிச்சை வசதி இல்லாததால், கடந்த 2012-ம் ஆண்டு, கைக்குழந்தையாக இருந்த போதே இந்தியாவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டது. எட்டு மாதங்கள் சிகிச்சையில் இருந்த குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு மீண்டும் பாகிஸ்தானுக்கு பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டார்.
இதனிடையே சமீபத்தில் அந்தச் சிறுமிக்கு மீண்டும் இந்தியாவில் சிகிச்சை எடுக்க முடிவு செய்தனர். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர், பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது யூசுப்பின் உதவியை நாடினர். அவரும் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாஜக எம்.பி.யுமான கவுதம் காம்பிரை தொடர்பு கொண்டு சிறுமிக்கு இந்தியாவில் சிகிச்சை அளிக்க உதவி செய்யும்படி கோரிக்கை வைத்தார்.
இதனை உடனே ஏற்றுக்கொண்ட காம்பீர் கடந்த 1-ம் தேதி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு இது தொடர்பாக கடிதம் எழுதினார். இதைத் தொடர்ந்து, இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகம் மூலம் சிறுமி மற்றும் அவரது பெற்றோர்கள் இந்தியா வருவதற்கு விசா வழங்க வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உத்தரவிட்டார். சிறுமியின் சிகிச்சைக்காக வெளிவுறவு அமைச்சகம் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும் கவுதம் காம்பீருக்கு, மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பதில் கடிதம் எழுதியுள்ளார்.
பாகிஸ்தான் சிறுமியின் சிகிச்சைக்காக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உதவி செய்தது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை காம்பீர் பதிவிட்டுள்ளார். அதில், ஒரு சிறிய இதயம் அந்த பக்கத்திலிருந்து கதவை தட்டியது. அதற்காக இந்தப் பக்கத்திலுள்ள இதயம் எல்லா உதவிகளையும் செய்துள்ளது என்றும் காம்பிர் குறிப்பிட்டுள்ளார்.இரண்டு குழந்தைகளின் தந்தையான தனக்கு, அந்த சிறுமிக்கு உதவி செய்ய வேண்டுமென்று தோன்றியதாகவும், அந்தச் சின்னஞ்சிறு கால்களை தென்றல் வருடும் என்றும் சில நேரங்களில் ஒரு மகள் தனது வீட்டிற்கு வந்தது போல உணர்கிறேன் என்றும் காம்பீர் பதிவிட்டுள்ளார். இது மட்டுமல்லாமல் இதற்கு உதவிகரமாக இருந்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், பிரதமர் மோடிக்கும் காம்பீர் நன்றி தெரிவித்துள்ளார்.