எந்த பட்டனை அமுக்கினாலும் தாமரைக்கு தான் ஓட்டு விழும் என்ற பாஜக எம்எல்ஏ..! ரொம்ப,ரொம்ப நியாயவான் என ராகுல் காந்தி கமெண்ட்…!

அரியானாவைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ ஒருவர், ஓட்டு மெஷினில் எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரை சின்னத்தில் தான் ஓட்டு பதிவாகும் என கூறும் வீடியோ
வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட எம்எல்ஏவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், பாஜகவில் ரொம்ப நியாயமான மனிதர் இவர்தான்பா என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் கிண்டலாக கமெண்ட் அடித்துள்ளார்.

 

ஓட்டு மெஷினில் எந்த பட்டனை தட்டினாலும் பாஜகவின் தாமரை சின்னத்துக்கு கட்டு விழுமாறு தில்லுமுல்லு நடப்பதாக சமீப காலமாக நாடு முழுவதும் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இதனால் கடந்த மக்களவைப் பொதுத் தேர்தலின் போது, ஒட்டு மொத்த எதிர்க்கட்சிகளும் ஓட்டுச் சீட்டு முறையை கொண்டு வர வேண்டும் என தேர்தல் ஆணையத்திடமும், உச்சநீதிமன்றத்திலும் முறையிட்டன. ஆனால் தேர்தல் ஆணையமோ, ஓட்டு மெஷினில் தில்லு முல்லு செய்ய வாய்ப்பே இல்லை என்று சத்தியம் செய்யாத குறையாக அடித்துக் கூறி விட்டது. எனவே பொதுத் தேர்தலில் நாடு முழுவதும் வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட, தேர்தலுக்குப் பின்னரும் வாக்கு எந்திரங்களில் தில்லு முல்லு என்ற புகார்கள் தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது.

இதற்கிடையே மகாராஷ்டிரா மற்றும் அரியானா மாநில சட்டப்பேரவைகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது.இந்த இரு மாநிலங்களிலும் தற்போது ஆட்சியில் இருப்பது பாஜக தான். இந்தத் தேர்தலில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க பாஜக பகீரதப் பிரயத்தனம் செய்து வருகிறது.
இந்நிலையில் அரியானா பாஜக எம்எல்ஏ ஒருவர், ஓட்டு எந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும், பாஜகவின் சின்னமான தாமரைக்கு தான் ஓட்டு விழும் என்று கூறும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

 

அசாந்த் தொகுதி பாஜக எம்எல்ஏவான பக்சி சிங் விர்க் என்பவர், தற்போது நடைபெறும் தேர்தலில் மீண்டும் போட்டியிடுகிறார்.தமது ஆதரவாளர்களிடையே அவர் பேசிய வீடியோ தான் இப்போது வைரலாகி வருகிறது. அதில், வாக்காளர்கள் யாருக்கு ஓட்டுப் போட்டார்கள் என்பதை நாங்கள் ஈசியா கண்டுபிடிச்சுருவோம்ல… என்று வாக்காளர்களை மிரட்டுவது போல கூறுகிறார். அதன் பின் எந்த பட்டனை அழுத்தினாலும், ஓட்டு தாமரைக்குத் தான் விழும் தெரியும்ல… என்று சிரித்தபடியே பேசி ஆதரவாளர்களையும் கலகலப்பாக்குகிறார். அது மட்டுமா? பிரதமர் மோடியும், அரியானா முதலவர் மனோகர்லால் கட்டாரும் ரொம்ப இன்டெலிஜென்ட் தெரியுமா? என்றும் பாஜக எம்எல்ஏ பேசும் வீடியோ, இப்போது அவருக்கே பெரும் சிக்கலாகி விட்டது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி சர்ச்சையாக, தேர்தல் ஆணையத்துக்கும் புகார்கள் சென்றன. இதையடுத்து சம்பந்தப்பட்ட எம்எல்ஏவுக்கு விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அது மட்டுமின்றி சம்பந்தப் uட்ட எம்எல்ஏ போட்டியிடும் அசாந்த் தொகுதியில், தேர்தல் நியாயமாக நடைபெறுகிறதா? என்பதையும், ஓட்டு மெஷினில் ஏதும் தில்லு முல்லு நடக்கிறதா? என்பதை கண்டறியவும் கூடுதலாக சிறப்பு பார்வையாளர்களை நியமித்துள்ளது.

 

இதற்கிடையே காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி, சம்பந்தப்பட்ட பாஜக எம்எல்ஏ , இந்தியில் பேசும் வீடியோவை, ஆங்கில டைட்டிலுடன் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, பாஜகவில் ரொம்ப ரொம்ப நியாயவான் இவர்தான் என்று கிண்டலாக பதிவிட்டுள்ளதும் வைரலாகி வருகிறது.

 

இந்நிலையில், சம்பந்தப்பட்ட பாஜக எம்எல்ஏவோ வழக்கமாக அரசியல்வாதிகள் கூறுவது போல, தாம் அப்படி பேசவேயில்லை என்று மறுத்துள்ளார். சம்பந்தப்பட்ட வீடியோ போலியானது என்றும், தம்மீது அவதூறு பரப்புவதற்காக யாரோ திட்டமிட்டு சதி செய்து வீடியோவை தயாரித்துள்ளார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

ஓட்டுப்பதிவு எந்திரம், அரியானா பாஜக எம்எல்ஏ, சர்ச்சை பேச்சு


Leave a Reply