மதுரை திமுகவில் சில வருடங்களாக அமைதி காத்து வந்த மு.க.அழகிரியின் விசுவாசிகள் மீண்டும் கலகக் குரல் எழுப்ப ஆரம்பித்துள்ளனர். அண்ணே… அண்ணே அழகிரி அண்ணே… நம்ம கட்சி நல்ல கட்சி.. மதுரையில் இப்ப ரொம்ப கெட்டுப்போச்சுண்ணே..என்ற வாசகங்களுடன் மதுரை நகர் முழுவதும் அழகிரி ஆதரவாளர்கள் ஒட்டியுள்ள போஸ்டரால் மீண்டும் கோஷ்டிப் பூசல் விஸ்வரூபமெடுக்கும் என்றே தெரிகிறது.
திமுக தலைவராகவும், முதலமைச்சராகவும் கருணாநிதி இருந்த காலத்திலேயே அவ்வப்போது கட்சித் தலைமைக்கும், ஆட்சித் தலைமைக்கும் எதிராக கலகக் குரல் எழுப்பி சர்ச்சையை ஏற்படுத்துவது அவருடைய மூத்த மகனான மு.க.அழகிரிக்கு வாடிக்கையாக இருந்து வந்தது.கட்சியில் மு.க.ஸ்டாவினுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை எதிர்த்தே மு.க.அழகிரி அடிக்கடி சர்ச்சையை ஏற்படுத்தினார்.
இதனால் மு.க.அழகிரியை தென் மண்டல திமுக பொறுப்பாளராக்கினார் கருணாநிதி.தொடர்ந்து மதுரை எம்.பியாக்கி மத்திய அமைச்சர் பதவியில் அமர்த்தியும் அழகு பார்த்தார். ஆனாலும் கட்சிக்குள் தமிழகம் முழுவதும் தனக்கென ஒரு கோஷ்டியை உருவாக்கி, கருணாநிதிக்கும், கட்சிக்கும் தொடர்ந்து தர்மசங்கடத்தை ஏற்படுத்தி வந்தார் அழகிரி. அதுவும் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கட்சியில் தன்னை மீறி எதுவும் நடக்கக்கூடாது என்று எழுதப்படாத சட்டமே போட்டு, அழகிரியும் அவரது ஆதரவாளர்களும் மட்டுமே கோலோச்ச தொடங்கினர். இதனால் மு.க.ஸ்டாலினின் ஆதரவாளர்கள் முற்றிலும் ஒரங்கட்டப்பட, ஒரு கட்டத்தில் மு.க.ஸ்டாலினே மதுரையில் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாத சூழலும் ஏற்பட்டது.
இதனால் மதுரை திமுகவில் கோஷ்டிப்பூசல் உச்சகட்டத்தை எட்ட, 2016 சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னர் மு.க.அழகிரியையும், அவருடைய ஒட்டுமொத்த ஆதரவாளர்களையும் கட்சியிலிருந்து கட்டம் கட்டி அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டார் கருணாநிதி. சும்மா இருப்பாரா? அழகிரி. 2016 தேர்தலில் உள்ள டி வேலை பார்த்ததால் தென் மாவட்டங்களில் திமுக பல தொகுதிகளை இழந்ததுடன், கருணாநிதி மீண்டும் ஆட்சி அரியணையில் ஏற முடியாத சூழலும் உருவாகி விட்டது.
அதன் பின்னர் கருணாநிதியும், அவருடைய குடும்பத்து உறுப்பினர்களும் எப்படியோ சமாதானப்படுத்தி அழகிரியை அடக்கி வாசிக்க வைத்தனர். இதனால் கடந்த சில வருடங்களாக அமைதி காத்து வந்த மு.க.அழகிரி, உயிருடன் கருணாநிதி இருக்கும் போதும் சரி, அவரது மறைவுக்குப் பின்னரும் சரி கட்சிக்குள் அனுமதிக்கப்படவில்லை. அதுவும் மு.க.ஸ்டாலின் திமுக தலைவர் பொறுப்பேற்ற பின்னர், மு.க.அழகிரி சுத்தமாக ஓரங்கட்டப்பட்டார். கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தன்று கூட தனது குடும்பத்தினருடன் மட்டும் தனியே சென்று சமாதியில் அஞ்சலி செலுத்தினார்.
இதனால் அழகிரி எந்த நேரமும் மீண்டும் ஒரு கலகத்தை ஏற்படுத்துவார் என்றே எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தான் மதுரையில் அவருடைய ஆதரவாளர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்களும், அதன் வாசகங்களும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள் சிலர், கருணாநிதி, மு.க.அழகிரி, முன்னாள் துணை மேயர் மன்னன் ஆகியோர் படத்துடன், கட்சியின் கருப்பு சிவப்பு வண்ணத்தில், அண்ணே… அண்ணே அழகிரி அண்ணே… நம்ம கட்சி நல்ல கட்சி.. மதுரையில் இப்ப ரொம்ப கெட்டுப்போச்சுண்ணே..என்ற வாசகங்களுடன் மதுரை நகர் முழுவதும் அழகிரி ஆதரவாளர்கள் ஒட்டியுள்ள போஸ்டரால் திமுகவில் மீண்டும் ஒரு பிரளயம் வெடிக்கும் என்றே தெரிகிறது.