அலிபாபாவும் 40 திருடர்களும் என அதிமுக அமைச்சர்களைப் பற்றி விமர்சனம் செய்த சீமான் மீது தூத்துக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் ஆக்ரோஷ முழக்கங்கள், சமீப காலமாக பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது, விடுதலைப் புலிகளுக்கு எதிராக செயல்பட்ட முன்னாள் பிரதமர் ராஜீவை நாங்கள் தான் கொன்றோம்.எங்கள் மண்ணில் புதைத்தோம் என்று சீமான் பேசியதற்கு தேசிய அளவில், பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஒட்டு மொத்த அரசியல் கட்சித் தலைவர்கள் மட்டுமின்றி, தமிழீழ ஆதரவாளர்களும் சீமானின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நாங்குநேரி தொகுதியில் இடைத் தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற சீமான், தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்களைப் பற்றி விமர்சித்த சீமான், அலிபாபாவும் நாற்பது திருடர்களும் என்று சீண்டினார். இந்தப் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவதூறாக பேசிய சீமான் மீது நடவடிக்கை எடுக்குமாறும் அதிமுக பிரமுகரான சுயம்பு என்பவர் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து போலீசார் சீமான் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.






