திகார் சிறையில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை விசாரணை – மீண்டும் கைது?

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து அவர் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

 

கடந்த 2007-ம் ஆண்டில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது மும்பையைச் சேர்ந்த ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம், அன்னிய முதலீடு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதில் மோசடி நடந்ததாக, சிபிஐ மற்றும் மத்திய அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில், அப்போது மத்திய நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் மற்றும் அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டது. தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 21-ந் தேதி ப.சிதம்பரத்தை, அவருடைய வீட்டின் சுவரேறிக் குதித்து சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து 15 நாட்களுக்கும் மேலாக சிபிஐ அதிகாரிகள் விசாரித்தனர். இந்தக் காலக்கட்டத்தில் ஜாமீன் கோரி ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுக்களும் நிராகரிக்கப்பட்ட நிலையில், தற்போது டெல்லி திகார் சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார். அவருடைய நீதிமன்ற காவல், நாளையுடன் முடிவடைகிறது. இந் நிலையில் இந்த வழக்கில் அமலாக்கத் துறையும் ப.சிதம்பரத்தை கைது செய்ய குறி வைத்துள்ளது. ஐஎன்எக்ஸ் முறைகேடு தொடர்பாக, ப. சிதம்பரத்தை கைது செய்து காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத் துறை தரப்பு சார்பில் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது நேற்று விசாரணை நடந்தது.

 

அப்போது ப. சிதம்பரத்திடம் 30 நிமிடங்கள் விசாரிக்க அனுமதி அளித்த நீதிபதி, அதன் பிறகு, காவலில் எடுக்க மனு தாக்கல் செய்யும்படியும் தெரிவித்தார். இதற்கு,நீதிமன்ற வளாகத்திலேயே ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்தி, இங்கேயே அவரை கைது செய்கிறோம் என, அமலாக்கத் துறை அதிகாரிகள் கூறியதை நீதிபதி ஏற்க மறுத்தார்.

 

ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்தவர். எனவே அவருடைய கவுரவத்தையும் பார்க்க வேண்டும். பொது இடத்தில் வைத்து கைது செய்தால் கண்ணிய குறைவாகி விடும் என கூறிய நீதிபதி, திகார் சிறையில் வைத்து ப.சிதம்பரத்திடம் இன்று விசாரணை நடத்தவும், அதற்கான ஏற்பாடுகளை சிறை நிர்வாகம் செய்து தருமாறும் உத்தரவிட்டார். விசாரணைக்குப் பின், தேவைப்பட்டால் ப.சிதம்பரத்தை கைது செய்யலாம் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

இதனையடுத்து திகார் சிறையில் இன்று காலை மகேஷ் குப்தா தலைமையிலான அமலாக்கத்துறை அதிகாரிகள் 3 பேர், ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்தினர். சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக ப.சிதம்பரத்திடம் அவர்கள் விசாரணை மேற்கொண்ட பின் சிறையிலிருந்து புறப்பட்டுச் சென்றனர். இதைத் தொடர்ந்து, ப.சிதம்பரத்தை கைது செய்ய சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தரப்பு மனு தாக்கல் செய்யும் என்றும், அதனால் அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படுவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

இன்று காலை ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்திய போது, திகார் சிறைக்கு அவருடைய மனைவி நளினியும், மகன் கார்த்தியும் வந்திருந்தனர். ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கில் சிபிஐ யைத் தொடர்ந்து, அமலாக்கத்துறையும் ப.சிதம்பரத்தை கைது செய்ய குறிவைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply