அயோத்தி வழக்கில் விசாரணை நாளையுடன் நிறைவு பெறும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளார். 1992 ஆம் ஆண்டு அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட நிலையில் 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்ற பிரச்சினைக்கு முடிவு காண பல ஆண்டுகளாகவே உச்சநீதிமன்றம் தீவிரம் காட்டியது. பல்வேறு கட்ட விசாரணைகளுக்கு பின்னர் கடந்த மார்ச் மாதம் எட்டாம் தேதி முன்னாள் நீதிபதி தலைமையில் மத்தியஸ்தர் குழு ஒன்று அமைக்கப்பட்டது.
ஸ்ரீஸ்ரீரவிசங்கர் வழக்கறிஞர் ஸ்ரீராம் ஆகியோர் இந்த குழுவில் இடம் பெற்றனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த குழுவின் சமரச முயற்சி தோல்வியில் முடிந்தது. இதையடுத்து வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. அயோத்தி வழக்கு தொடர்பான 14 மேல்முறையீட்டு மனுக்கள் மற்றும் புதிய மனு ஆகியவற்றின் மீதான விசாரணை நடந்து வருகிறது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிபதிகள் ஆகியோர் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். அயோத்தி வழக்கை தினமும் விசாரிக்க வேண்டும் என தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்திருந்த நிலையில் விடுமுறை தவிர்த்து மற்ற அனைத்து நாட்களும் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது. பல்வேறு புதிய ஆதாரங்கள் இந்த வழக்கில் சமர்ப்பிக்கப்பட்டன.
இந்தநிலையில் அயோத்தி வழக்கு நாற்பதாவது நாளான இன்றுடன் நிறைவு பெறும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் 17 ஆம் தேதி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஓய்வுபெற இருப்பதால் அதற்குள் அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.இதனிடையே நிறைவுபெற இருப்பதை தொடர்ந்து மத ரீதியிலான மோதல்களை ஏற்படாமல் தடுக்க மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.