சிலிண்டர் வினியோகம் செய்யும்போது டெலிவரி கட்டணம் வசூலிக்கப்பட வரை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என எண்ணெய் நிறுவனங்கள் பதில் அளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர் கட்டணத்துடன் விநியோக கட்டணமும் ரசீதில் குறிப்பிடப்படும் நிலையில் கூடுதலாக டெலிவரி கட்டணம் வசூலிக்க படுவதாக சென்னையை சேர்ந்த மருத்துவர் லோகரங்கன் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ஏற்ப 20 முதல் 100 ரூபாய் வரை கட்டாயமாக வசூலிக்கப்படும் தெரிவிக்கப்பட்டிருந்தது. நாடு முழுவதும் 23 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் இருக்கும் நிலையில் டெலிவரி கட்டணம் என்ற பெயரில் கோடிக்கணக்கில் பண மோசடி செய்யப்படுவதாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக ஆயிரக்கணக்கானோர் புகார் தெரிவித்தும் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனுதாரர் ஆதங்கப்பட்டார்.
அதனை விசாரித்த நீதிபதிகள் சத்யநாராயணன் சேஷசாயி அமர்வு டெலிவரி கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து 2124 புகார்கள் இருக்கும் நிலையில் அது குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என எண்ணெய் நிறுவன வழக்கறிஞர்களிடம் கேள்வி எழுப்பினார். நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக எண்ணெய் நிறுவனங்கள் தரப்பில் கூறப்பட்டது அது தொடர்பான விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும் டெலிவரி கட்டணம் என்ற பெயரில் நுகர்வோரிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று நவம்பர் 1-ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.