சவுதி அரேபியாவிற்கு வேலைக்கு சென்ற தமிழக இளைஞர்கள் சிலர் பணிபுரியும் நிறுவனத்தில் தங்களுக்கு ஊதியம் வழங்காமல் ஏமாற்றியதாகவும் தாயகம் திரும்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கண்ணீருடன் கோரிக்கை வைத்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் தென்காசி பகுதியைச் சேர்ந்த 8 பேர் கடந்த மே மாதம் ஹைதராபாத்தைச் சேர்ந்த நிறுவனம் மூலம் சவுதியில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்துள்ளனர்.
அந்த நிறுவனத்தில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட 8 பேருக்கும் கடந்த மூன்று மாதங்களாக சரியாக ஊதியம் வழங்கப்படவில்லை என தெரிகிறது. மேலும் சவுதியில் உள்ள அமைப்பின் நிர்வாகிகள் அந்த எட்டு பேரையும் சந்தித்ததோடு அவர்களின் புகார்களை இந்திய தூதரகத்தில் கொடுத்துள்ளனர். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் தாயகம் திரும்ப மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சவுதி அரேபியாவில் கஷ்டப்படும் 8 பேரும் கண்ணீருடன் கோரிக்கை வைத்துள்ளனர்.