கடும் மழையால் போக்கை மாற்றி, நிலக்கரி சுரங்கத்தில் புகுந்த நதி

சத்தீஸ்கர் மாநிலத்தில் கடும் மழையால் நதி ஒன்று தன் போக்கை மாற்றி ஆசியாவின் மிகப்பெரிய நிலக்கரி சுரங்கங்களில் ஒன்றை தற்காலிக அருவியாக்கிய நிலையில் சுரங்க பாதுகாப்பு குழு அங்கு ஆய்வு மேற்கொண்டது. தொடர்ந்து பெய்த கனமழையால் கிளை நதி தன் போக்கை மாற்றி நிலக்கரி சுரங்கத்திற்குள் கடந்த திங்களன்று புகுந்தது.

 

ஆண்டுக்கு 35 மில்லியன் டன் நிலக்கரி எடுக்கப்பட்டதாக கூறப்படும் அந்த சுரங்கம் திடீரென தற்காலிக அருவியாக உருவெடுத்தது. கரிய நிறத்தில் ஆர்ப்பரித்த நீரை கண்டு தொழிலாளர்கள் அலறியடித்து ஓடி வேடிக்கை பார்த்ததோடு அதிசயத்தை படம் பிடித்தனர். மனிதனின் திட்டங்களை முறியடித்து சுரண்டலுக்கு எதிராக இயற்கை பறித்துக் கொண்டதாக அந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

 

இந்த சம்பவத்தில் தொழிலாளர்கள் யாருக்கும் ஆபத்து ஏற்படவில்லை என சுரங்க நிர்வாகம் கூறியுள்ளது. இருப்பினும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான ராட்சத வாகனங்கள் இயந்திரங்கள் சேதம் அடைந்ததாக தெரிவித்துள்ளது. சுரங்க பாதுகாப்பு அதிகாரிகள் குழு சம்பவ இடத்தை ஆய்வு செய்தது.


Leave a Reply