தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் அதற்கான மாற்று பொருட்கள் குறித்த காட்சி கையேட்டை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் இந்த தடை அமலுக்கு வந்தது. தடை மீதான நடைமுறை முன்னேற்றம் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவ்வப்போது அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அந்த வகையில் தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர், வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் தலைமை செயலாளர் சண்முகம் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் அதற்கான மாற்று பொருட்கள் குறித்த காட்சிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.