கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன்.இவரது மனைவி மோகனப்பிரியா. இவர்கள் அன்னூர் சாலையில் ஹாலோபிளாக் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் மோகனப்பிரியா இன்று காலை தனது குழந்தைகளை பள்ளியில் விட்டு விட்டு கருமத்தம்பட்டி சர்வீஸ் சாலையில் சென்று கொண்டு இருந்தார்.
அப்போது முன்னால் சென்றுகொண்டிருந்த கண்டெய்னர் லாரி திடீரென இடது பக்கம் திரும்பியதால் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த மோகனப்பிரியா மீது மோதியதில் அவர் லாரியின் பின்பக்க சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இதனையடுத்து விபத்து குறித்து அறிந்த கருமத்தம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,பழுதான மேம்பாலத்தை புனரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் கட்டுமான பொருட்களை அங்கேயே வைத்து சென்றதால் லாரியின் ஓட்டுனர் அதை பார்த்து திடீரென திரும்பியதால் பின்னால் வந்த பெண் லாரியின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்ததாகவும், மற்ற பாலங்களைக் காட்டிலும் மிக குறுகலான பாலமாக கருமத்தம்பட்டி பாலம் உள்ளதால் அழுத்தம் தாங்காமல் தற்போது பாலம் விரிவடைய துவங்கிய நிலையில் அதனை சரிசெய்யும் பணியில் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாகவும், இரவு நேரத்தில் மட்டும் இந்த பணியை அவர்கள் மேற்கொண்டு பகலில் அப்படியே அந்த பகுதியில் கட்டுமான பொருட்களை விட்டுச் செல்வதால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதாக குற்றம் சாட்டினர்.
ஏற்கனவே,அகலம் குறைந்த சர்வீஸ் சாலையில் பல விபத்துக்கள் ஏற்பட்டு வரும் நிலையில் தேசிய நெடுஞ்சாலைத் துறை ஊழியர்களின் அஜாக்கிரதையால் தற்போது விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு நிகழ்ந்துள்ளதாக கூறிய அவர்கள் உடனடியாக மேம்பாலத்தை இடித்து புதிய மேம்பாலம் கட்ட வேண்டும் குறுகலாக உள்ள சர்வீஸ் சாலையை அகலப்படுத்த வேண்டும் எனவும், அவ்வாறு செய்யாவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.