ஹெல்மெட் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் அதிருப்தி!

ஹெல்மெட் வழக்கில் உயர் நீதிமன்றம் கேட்கும் விபரங்களை அதிகாரிகள் வழங்காததால் அதிகாரிகளுக்கு எதிராக உத்தரவை பிறப்பிக்க நேரிடும் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த கோரி ராஜேந்திரன் என்பவர் தொடர்ந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணிய பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

 

அப்போது கட்டாய சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அமல்படுத்துவது குறித்து நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். தமிழகத்தில் 2007 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட கட்டாய ஹெல்மெட் சட்டத்தை ஓராண்டுக்குள் அமல்படுத்தப்படும் என அரசு தெரிவித்தபோதும், அதனை நடைமுறைப்படுத்த 12 ஆண்டுகளாக இருப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

 

உத்தரவுகளை அமல்படுத்தவில்லை என்பது குறித்து தமிழக உள்துறை செயலாளரும் ஹெல்மெட் அணியாமல் சாலை விபத்தில் பலியானோர் விவரங்கள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்யாதது குறித்து சுகாதாரத்துறை செயலாளர் பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

மாவட்டம் வாரியாக ஹெல்மெட் அணியாதவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விவரங்களை சமர்ப்பிக்குமாறு டிஜிபிக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். இந்த விவரங்களை வழங்காத அதிகாரிகளுக்கு எதிராக உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என எச்சரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அடுத்த கட்ட விசாரணையை வரும் 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Leave a Reply