வேறு வழி இல்லாததால் சடலத்தை பாலத்தில் இருந்து கட்டி இறக்கிய சம்பவம்!
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே சுடுகாட்டிற்கு செல்ல பாதைகள் இல்லாததால் உயிரிழந்தவர் உடலை கொண்டு செல்ல வினோதமான நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது. வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே நாராயணபுரம் காலனி உள்ளது. பட்டியல் இனத்தவர்கள் அதிகமாக வாழும் இந்தப் பகுதியில் இவர்களுக்கு என தனி சுடுகாடு உள்ளது.
ஆனால் இங்கு போதிய வசதிகள் இல்லாததால் இறந்தவர்களை பாலாற்றங்கரை சுடுகாட்டிற்கு இவர்கள் கொண்டு செல்கின்றனர். இந்த சூழலில் சில ஆண்டுகளுக்கு முன்பு பாலாற்றை கடக்க பாலம் கட்டப்பட்டது. இதனால் பாலத்தின் இருபுறமும் ஆற்றுக்கு செல்லும் பாதைகளில் வேலி அமைத்து அங்குள்ள விவசாயிகள் வழியை அடைத்து விட்டதாக கூறப்படுகிறது.
மேலும் நாராயணபுரம் காலனியைச் சேர்ந்தவர்களின் சடலத்தை அந்த பகுதி வழியாக எடுத்துச் செல்ல விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு நாராயண புரத்தை சேர்ந்த குப்பன் என்பவர் விபத்தில் மரணமடைந்தார்.

இவரது உடலை விவசாய நிலம் வழியாக எடுத்துச் செல்ல எதிர்ப்பு தெரிவித்ததால் வேறு வழியின்றி அருகிலிருந்த பாலத்திலிருந்து கயிற்றால் இறக்கி அதன்பின், அங்கிருந்த இவர்கள் சுடுகாட்டிற்கு கொண்டு சென்றனர்.
இறந்த பின்னரும் தொடரும் இந்த அவலம் பற்றி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியருக்கும், முதல்வரின் தனிப்பிரிவிற்கும் அரசு கையகப்படுத்தி சுடுகாட்டிற்கு பாதை அமைத்து போதிய வசதிகள் செய்து தரும்படி நாராயணபுரம் மக்கள் கோரிக்கையாக உள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




