பல்வேறு மாவட்டங்களில் வெளுத்துவாங்கிய கனமழை..!
தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கிய நிலையில், பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, புதுக்கோட்டை மாநகர பகுதிகளில் அரை மணிநேரத்திற்கு மேலாக கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.
திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளிலும் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், சாலைகள் வெள்ளக்காடாக மாறியதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். தஞ்சாவூரில் காலையில் வெயில் வாட்டிய நிலையில், மாலையில் திடீரென மழை பெய்தது. நிலத்தடி நீர்மட்டம் உயர்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கரூர் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல் உருவானது. பள்ளப்பட்டியில் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி, போடிநாயக்கனூர், பெரியகுளம், கம்பம் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. போடி மெட்டு மலைச் சாலையில் கடுமையான பனிமூட்டம் நிலவியது.
இந்நிலையில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் கோவை, நீலகிரி, தேனி மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தென்காசி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களிலும், பெரம்பலூர், அரியலூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்யும் எனக் கூறியுள்ளது.
மேலும், கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, சிவகங்கை, தருமபுரி, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்யும் என வானிலை மையம் கணித்துள்ளது.தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கூறியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




