லாரி உரிமையாளர்கள் நாளை கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருப்பதால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டு இருக்கிறது. நிலத்தடி நீர் எடுப்பதற்கு சென்னை நீதிமன்ற வழிகாட்டுதலின்படி தமிழக அரசு பல்வேறு நிபந்தனைகளை விதித்தது. இதன்படி சட்டவிரோதமாக தண்ணீர் எடுக்கும் லாரி உரிமையாளர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதனால் வழக்குகளுக்கு பயந்து தண்ணீர் லாரி ஓட்டுநர்கள் பணிக்கு வருவதை தவிர்த்து வருவதாக கூறப்படுகிறது. எனவே தண்ணீர் எடுப்பதற்கு முறையான அனுமதி அளிக்க வலியுறுத்தி தண்ணீர் லாரி உரிமையாளர்கள் நாளை முதல் கால வரம்பற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து இருக்கிறார்கள்.
தண்ணீர் லாரிகளின் பணிஉரிமையாளர்களின் பணி பாதுகாப்பை உறுதி செய்ய தனி வாரியம் அமைக்கவும் லாரி உரிமையாளர்கள் மீது திருட்டு வழக்கு பதிவு செய்வதை கைவிட வலியுறுத்தியும் நடைபெற இருக்கும், இந்த போராட்டத்தில் மாநிலம் முழுவதிலும் இருந்து 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகள் பங்கேற்க உள்ளன. இதனால் சென்னை மாநகரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டு இருக்கிறது.