கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் பெண் குழந்தைகளின் எதிர்காலம் பாதுகாப்பற்றதாக இருப்பதாக பெற்றோர் மத்தியில் கருத்து நிலவுகிறது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னை, தாம்பரத்தில் உள்ள கிறிஸ்தவ கல்லூரியில் விலங்கியல் மாணவ – மாணவிகள், கடந்த ஜனவரி மாதம் பெங்களூரு, மைசூரு, கூர்க் போன்ற ஊர்களுக்கு சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர்.
சுற்றுலா முடிந்து திரும்பியதும், 34 மாணவிகள் கையெழுத்திட்டு, சாமுவேல் டென்னிசன் மற்றும் ரவின் ஆகிய இரு பேராசிரியர்களும் பாலியல் தொல்லை அளித்ததாக கல்லூரி முதல்வருக்கு புகார் அளித்தனர்.இதன் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையின் முடிவில், பணிநீக்கம் செய்வது தொடர்பாக சாமுவேலுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நோட்டீஸை ரத்து செய்யக் கோரி சாமுவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன் விசாரணைக்கு வந்தபோது, விசாரணையின் போது கோரிய ஆவணங்கள், விசாரணைக்கு பின் வழங்கப்பட்டதாகவும், தன் தரப்பு வாதத்தை முன் வைக்க வாய்ப்பு வழங்காமல் இயற்கை நீதி மீறப்பட்டதாகவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால், அனைத்து வாய்ப்புகளும் வழங்கப்பட்டதாக கல்லூரி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்று, மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் அவர் உத்தரவில், தற்போது கிறிஸ்தவ மிஷனரீஸ் கட்டாய மத மாற்றங்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன எனவும், கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் பெண் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு பாதுகாப்பு இல்லை என்ற கருத்து பெற்றோர் மத்தியில் நிலவுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பெண்களின் பாதுகாப்புக்கு பல சட்டங்கள் இயற்றப்பட்ட போதும், அவை ஆண்களுக்கு எதிராக துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக சுட்டிக்காட்டிய நீதிபதி, அதற்கு வரதட்சணை தடைச் சட்டமே சிறந்த சான்றாக உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.
பெண்கள் பாதுகாப்புக்கான சட்டங்கள் தவறாக பயன்படுத்தப்படாமல் இருக்கவும், அப்பாவி ஆண்களை பாதுகாக்கும் வகையில் உரிய சட்டத் திருத்தங்களை கொண்டு வருவது குறித்து அரசு சிந்திக்க வேண்டிய தருணம் இது எனவும் நீதிபதி தன் உத்தரவில் தெரிவித்துள்ளார்.