மேட்டூர் அணையில் திறந்துவிடப்பட்ட காவிரி நீர் திருச்சி மாவட்டத்துக்கு நாளை மறுநாள் வரும் நிலையில் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு வெளியிட்டுள்ள அறிக்கை:கர்நாடகா, கேரளாவில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழையின் காரணமாக கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணை மற்றும் கபினி அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட பெருமளவு தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் சேலம் மாவட்டம், மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக நேற்று தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.திறந்துவிடப்பட்ட தண்ணீர் நாளை மறுநாள் காலை திருச்சி மாவட்டத்துக்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே காவிரி கரையோர கிராமங்களில் உள்ள மக்கள் மற்றும் சலவைத் தொழிலாளர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் நீர்வரத்து விவரத்தை அவ்வப்போது தெரிந்துகொள்ளுமாறும் தேவைப்பட்டால் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
காவிரி நீர் வந்து கொண்டிருக்கும் தற்போதைய நிலையில் ஆற்றில் குளிக்கவோ, நீந்தவோ, மீன்பிடிக்கவோ அல்லது பொழுதுபோக்கவோ பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. பாதுகாப்பற்ற கரையோரங்கள், ஆபத்தான் பகுதிகளில் செல்பி எடுக்க அனுமதி இல்லை. வெள்ள அபாயம் ஏற்பட்டால் 1077 கட்டணமில்ல தொலைபேசிக்கு தெரிவிக்கலாம்.