ஐஏஎஸ் அதிகாரி ஓட்டிவந்த கார் மோதி -பத்திரிகையாளர் பலி!

கேரளாவில் ஐ.ஏ.எஸ். அதிகாரி வேகமாக ஓட்டிவந்த கார் மோட்டார்சைக்கிள் மீது பயங்கரமாக மோதியதில் முகமது ப‌ஷீர் தூக்கிவீசப்பட்டு அந்த இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பலியானார்.

கேரள மாநில சர்வே துறை இயக்குனராக கடந்த வியாழக்கிழமை ஸ்ரீராம் வெங்கிடராமன் என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமிக்கப்பட்டார். டாக்டரான இவர் சமீபத்தில் தான் வெளிநாட்டில் மேற்படிப்பு முடித்துவிட்டு கேரளா திரும்பியிருந்தார். இவர் நேற்று அதிகாலை 1.30 மணி அளவில் திருவனந்தபுரம் அருங்காட்சியக சாலையில் ஒரு சொகுசு காரில் வேகமாக சென்றார். அவருடன் வாபா பைரோஸ் என்ற மாடல் அழகியும் உடன் இருந்தார். அந்த சொகுசு கார் அவருக்கு சொந்தமானது.

 

உள்ளூர் மலையாள பத்திரிகை ஒன்றில் தலைமை நிருபராக பணியாற்றிவந்த முகமது ப‌ஷீர் (வயது 35) வேலை முடிந்து வீட்டுக்கு மோட்டார்சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். ஐ.ஏ.எஸ். அதிகாரி வேகமாக ஓட்டிவந்த கார் அந்த மோட்டார்சைக்கிள் மீது பயங்கரமாக மோதியதில் முகமது ப‌ஷீர் தூக்கிவீசப்பட்டு அந்த இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பலியானார். ஸ்ரீராம் வெங்கிடராமனும் காயம் அடைந்தார்.

விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். முதலில் தான் காரை ஓட்டவில்லை என்று ஸ்ரீராம் கூறினார். ஆனால் கண்காணிப்பு கேமரா பதிவு மூலம் அவர் தான் காரை ஓட்டினார் என்பது தெரிந்தது. பத்திரிகையாளர் முகமது ப‌ஷீர் மறைவுக்கு முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


Leave a Reply