குடிநீர் விநியோக உரிமை வழங்க உள்ள சூயஸ் திட்டத்தை கண்டித்து ஆகஸ்ட் 9 ம் தேதி மாநகராட்சி அலுவலகம் முற்றுகை – சி.பி.எம் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கோவையில் அறிவிப்பு

இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைவது தொடர்பாக பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை எனவும், தற்போதைய சூழலில் இரு கட்சிகளும் இணைந்து கூட்டியக்கமாக செயல்பட வேண்டிய அவசியம் உள்ளது எனவும் சி.பி.எம் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெற்ற கையெழுத்துகளை மத்திய அரசிற்கு அனுப்பும் நிகழ்ச்சி, கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

 

இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் அரசியல் செயற்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது,பேசிய அவர் புதிய கல்வி கொள்கை நகலை முற்றாக கைவிட வேண்டும் என தெரிவித்தார். அக்கொள்கைக்கு எதிராக கோவையில் மட்டும் 50 ஆயிரம் பேரிடம் கையெழுத்து பெற்றிருப்பதாகவும், கட்சி வித்தியாசம் இன்றி மக்கள் கையெழுத்திட்டு வந்துள்ளதாகவும் கூறிய அவர்,கொரியர் மூலமாக மத்திய அரசிற்கு அனுப்ப உள்ளதாக தெரிவித்தார்.

மேலும், இக்கல்வி கொள்கை குறித்து கருத்து கூற ஆகஸ்ட் 15 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதால், கையெழுத்து இயக்கத்தை ஆகஸ்ட் 10 ம் தேதி வரை நீட்டிக்க உள்ளதாக தெரிவித்தார். புதிய கல்வி கொள்கையினால் கல்வி வியாபாரமாகும், மாநில உரிமைகள் பறிக்கப்படுமெனவும் கூறிய அவர், மாநில அரசு இதனை முற்றாக நிராகரிக்க வேண்டுமென தெரிவித்தார்.கோவை மாநகரை தொடர்ந்து பிற மாவட்டங்களிலும் குடிநீர் விநியோக உரிமை சூயஸ் நிறுவனத்திற்கு வழங்க உள்ளதாகவும்,சூயஸ் திட்டத்தை கண்டித்து ஆகஸ்ட் 9 ம் தேதி கோவை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படுமெனவும் அவர் கூறினார்.

இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைவது தொடர்பாக பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை எனவும், தற்போதைய சூழலில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைந்து கூட்டியக்கமாக செயல்பட வேண்டிய அவசியம் உள்ளதாகவும் கூறிய அவர்,ஆனால் இரு கட்சிகளும் இணையுமா என்பது குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என தெரிவித்தார்.


Leave a Reply