இந்தியாவில் முதல் முறையாகக் கழிவுநீர் அடைப்பை சுத்தம் செய்யும் ரோபோடை ஐ‌ஐ‌டி குழு கண்டுபிடித்துள்ளது!

இந்தியாவில் முதல் முறையாகக் கழிவுநீர் அடைப்பை சுத்தம் செய்யும் ரோபோட் ஒன்றைச் சென்னை ஐஐடி குழுவினர் கண்டு பிடித்துள்ளனர்.கழிவு நீர் அடைப்பை தற்போது துப்புரவுத் தொழிலாளர்கள் சுத்தம் செய்து வருகின்றனர். இதற்குப் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது.

 

கடந்த 1993 முதல் சுமார் 620 பேர் மரணம் அடைந்துள்ளனர். அத்துடன் மனிதக் கழிவை மனிதனே சுத்தம் செய்வதைப் பல சமூக நீதி ஆர்வலர்கள் எதிர்த்து வருகின்றன.இந்தியாவில் உள்ள 8 லட்சம் கழிவுநீர் அடைப்பு சுத்திகரிக்கும் தொழிலாளர்கள் பொருளாதார ரீதியாக மிகவும் பின் தங்கி உள்ளதால் தங்கள் உயிரைப் பணயம் வைத்து இந்த பணியைச் செய்து வருகின்றனர்.பல நேரங்களில் இவர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் அளிக்கப்படுவது கிடையாது.

 

இவ்வாறு மனிதர்கள் உயிரிழப்பை தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க ஐஐடி பேராசிரியர் பிரபு ராஜகோபால் திட்டமிட்டார்.அதையொட்டி அவர் தனது குழுவினருடன் இணைந்து ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்கக்கூடிய கழிவுநீர் அடைப்பைச் சுத்தம் செய்யும் ரோபோட் ஒன்றை கண்டுபிடித்துள்ளார். இதற்கு சிப்பாய் செப்டிக் டேங்க் ரோபோட் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த 50 கிலோ எடை கொண்ட ரோபோட்டில் ஒரு காமிரா பொருத்தப்பட்டிருக்கும். இதை இயக்குபவர் வெளியில் உள்ள திரையில் உள்ளே இருப்பவற்றைக் காண முடியும்.

 

உள்ளே இருக்கும் அடைப்பை வெளியில் இருந்தபடியே சரி செய்ய வசதியாக ரிமோட் கண்ட்ரோல் மூலம் செயல்படும் அதி வேக வெட்டுவான்கள் (cutters) ரோபோட்டில் பொருத்தப்பட்டிருக்கும் இந்த ரோபோட்டுக்கு அதிகம் பராமரிப்பு தேவைப்படாது. இதன் விலை சுமார் ரூ.5-10 லட்சம் வரை இருக்கும்.

 

இந்த முறையில் சுத்தம் செய்வது இரு கட்டமாக நடைபெறும். முதல் கட்டத்தில் அடைப்பில் உள்ள திடக்கழிவுகள் உடைக்கப்பட்டு வெளியேற்றப்படும். அத்துடன் இரண்டாம் கட்டத்தில் நீரின் மூலம் அந்த உடைக்கப்பட்ட கழிவுகள் குத்தி விடப்பட்டு அடித்துச் செல்லப்படும்.

 

இன்னும் ஓரிரு வருடங்களில் இந்த ரோபோட்டுகள் விலைக்குக் கிடைக்கும் என பேராசிரியர் அறிவித்துள்ளார். அதற்கு முன்பு இந்த ரோபோட் மேலும் பல கட்ட சோதனைகளில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


Leave a Reply