மக்களவை தேர்தலுக்கு பின் காங்கிரசில் தொடரும் ராஜினமாக்கள்

காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி விலகியதை அடுத்து அந்த கட்சியிலிருந்து முக்கிய பிரமுகர்கள் விலகுவது தொடர் கதை ஆகியுள்ளது. மக்களவை தேர்தல் தோல்விக்கு பொறுப்பு ஏற்று முதல் நபராக கட்சி பதவியை விட்டு விலகுவதாக ராகுல் காந்தி தெரிவித்தார். அவருடைய இந்த முடிவுக்கு கட்சிக்குள் கடும் எதிர்ப்பு கிளம்பிய போதும் தன்னுடைய நிலைப்பாட்டில் ராகுல் காந்தி உறுதியாக இருக்கிறார். இந்நிலையில் காங்கிரஸ் முக்கிய தலைவர்களும் ஒவ்வொருவராக பதவி விலக தொடங்கி இருக்கின்றனர்.

 

காங்கிரஸ் பொது செயலாளர்களில் ஒருவரான ஜோதிராதித்ய சிந்தியா ராஜினாமா செய்து இருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர்களில் ஒருவரான சிந்தியா ராகுல் காந்திக்கு மிகவும் நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. மும்பை மாநகர காங்கிரஸ் தலைவரான மிலிந்த் தியோராவும் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்து இருக்கிறார்.முன்னதாக காங்கிரஸ் பொது செயலாளர்களில் ஒருவரும், உத்தரகாண்ட் முன்னாள் முதலமைச்சருமான ஹரீஷ் ராவத் தன் பதவியை ராஜினாமா செய்து இருக்கிறார்.

 

இளைஞர் காங்கிரஸ் தலைவர் கே.சி. யாதவ், பட்டியிலின பிரிவு பொது செயலாளர் நிதின் ரவுத் ஏற்கனவே தங்களுடைய பதவியை ராஜினாமா செய்து உள்ளனர். இது தவிர கோவா , தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களின் முக்கிய பொறுப்புகளில் இருந்தவர்களும் பதவியை விட்டு விலகி நிற்கின்றனர். இதற்கிடையே ராகுல் காந்திக்கு பதிலாக இளம் தலைவரை தலைமை பதவிக்கு கொண்டு வரவேண்டும் என பஞ்சாப் முதல்வர் தெரிவித்து இருக்கிறார். இந்நிலையில் ராகுல் காந்தி ராஜினாமா குறித்து காங்கிரஸ் செயற்குழு கூட்டம் முடிவு எடுக்க வேண்டி இருக்கிறது.


Leave a Reply