11 மாத குழந்தை வாளி நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம்

சென்னையில் விளையாடி கொண்டிருந்த 11 மாத பெண் குழந்தை வாளியில் உள்ள நீரில் மூழ்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது. மயிலாப்பூர் கணேசபுரத்தை சேர்ந்த விமல் என்பவரின்11 மாத பெண் குழந்தை தனுஸ்ரீ. குழந்தை தனுஸ்ரீ தூங்கி கொண்டு இருந்த போது விமலின் மனைவி அம்பிகா பக்கத்து வீட்டுக்கு சென்றதாக தெரிகிறது. அப்போது தூக்கம் கலைந்து தவழ்ந்து வெளியே வந்த குழந்தை வாளியில் இருந்த நீரில் விளையாடிய போது தலை குப்புற கவிழ்ந்து விழுந்ததாக தெரிகிறது.

 

வீட்டிற்கு வந்த அம்பிகா தூங்கி கொண்டிருந்த குழந்தையை காணவில்லை என தேடிய போது வாளியில் கிடப்பது தெரிய வந்தது. அதிர்ச்சி அடைந்த அம்பிகாவின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

 

மெல்ல மெல்ல நடை பழகி வந்த குழந்தை தற்போது தன்னுடன் இல்லை என கண்ணீருடன் கூறுகிறார் தாய் . அடுத்த மாதம் பிறந்த நாள் கொண்டாடவிருக்கும் நிலையில் தண்ணீரில் மூழ்கி குழந்தை உயிரிழந்தது அக்குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இச்சம்பவம் குறித்து மயிலாப்பூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Leave a Reply