இந்தியா வந்துள்ள அமெரிக்கா வெளியுறவுத் துறை அமைச்சர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ 3 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்து இருக்கிறார். ஜி 20 நாடுகள் மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்துவதற்கு முன்னோட்டமாக மைக் பாம்பியோவின் வருகை அமைந்து இருக்கிறது.
நேற்று இரவு டெல்லிக்கு வந்த அமெரிக்கா வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோவிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கபட்டது. இதையடுத்து இரவு நட்சத்திர விடுதியில் தங்கிய மைக் பாம்பியோ இன்று காலை 10 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். வது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்று இருக்கும் நிலையில் அமெரிக்க தரப்பிலிருந்து நடைபெறும் முதல் சந்திப்பு இதுவாகும்.
மைக் பாம்பியோ, பிரதமர் நரேந்திர மோடியின் சந்திப்பின் போது இந்திய அமெரிக்கா இடையே பல்வேறு மட்டத்தினலான உறவுகள் குறித்து பேசப்பட்டதாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவிஷ் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடியுடன் நடந்த சந்திப்பை முடித்து விட்டு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவலை சந்திப்பதற்காக சௌத் பிளாக்கிற்கு வருகை புரிந்தார்.
அலுவலக வாசலில் வந்து மைக் பாம்பியோவை அஜீத் தோவல் வரவேற்று அழைத்து சென்றார். மைக் பாம்பியோ , அஜீத் தோவல் இடையிலான சந்திப்பின் போது தீவிர பிரச்சனை, பாதுகாப்பு மேம்பாடு , ஆயுத கொள்முதல் உள்ளிட்டவை குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் உடனான சந்திப்பை நிறைவு செய்த அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ சௌத் பிளாக் அலுவலகத்திலிருந்து ஜவகர்லால் நேரு பவனுக்கு வந்தார்.
அங்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கரை மைக் பாம்பியோ சந்தித்து பேசினார். இவர்களுக்கு இடையிலான பேச்சு வார்த்தைக்கு பிறகு, மைக் பாம்பியோ ரஷியாவிடம் இருந்து எஸ்.400 ஏவுகணை அமைப்பை இந்தியா பெற வேண்டாம் என்பதை நேரடியாக சொல்லாமல், அமெரிக்காவை போன்று இந்தியாவும் தன்னைதானே பாதுகாத்து கொள்ளக்கூடிய ஆற்றல் பெற்ற நாடு என்றார்.
இந்திய அமெரிக்க வர்த்தக உறவில் ஏற்பட்டுள்ளதை பற்றி பேசிய மைக் பாம்பியோ இரு நாடுகளும் விட்டு கொடுத்து , மனம் ஒத்து பணியாற்றினால் பிரச்சனை தீர்வதோடு , பரஸ்பரம் உறவின் அடித்தளம் மேலும் பலப்படும் என்றார். ஜெய் சங்கர் பாரசீக வளைகுடாவில் நிலவும் பதற்றம் குறித்து மைக் பாம்பியோவுடன் பேச்சு வார்த்தை நடத்துவதாக கூறினார். பன்னாட்டு அளவிலான எரிபொருள் தேவை கணிக்க முடியாத ஒன்று என்றும், ஈரான் விவகாரத்தில் இந்தியாவின் நிலையை அமெரிக்கா புரிந்து கொள்ளும் என்றும் ஜெய்சங்கர் கூறினார்.