தமிழகத்தில் நிலவி வரும் குடிநீர் பிரச்சனையை போக்க அரசு பல்வேறு விதமான முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க சென்னையில் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக குடிநீரை வழங்கி வருகிறது பிரியாணி கடை நிர்வாகம் ஒன்று. சென்னையில் வேளச்சேரி,மடிபாக்கம் என இரண்டு இடங்களில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள் 10 பேர் சேர்ந்து தொடங்கியது தான் “தொப்பி வாப்பா பிரியாணி” கடை.
சுவையான பிரியாணிக்கு பேர் போன இந்த கடை தற்போது குடிநீரை இலவசமாக வழங்கி பிரபலம் அடைந்து வருகிறது. அதாவது, இங்கு ஒரு கிலோ பக்கெட் பிரியாணி வாங்குபவர்களுக்கு இலவசமாக இருபது லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் நிலவும் தண்ணீர் பிரச்சனையை அரசுக்கு உணர்த்தவே குடிநீரை இலவசமாக தருவதாக கூறுகின்றனர், கடை நிர்வாகிகள்.
இலவசமாக குடிநீர் வழங்குவதை மக்கள் விழிப்புணர்வாக எடுத்து கொள்ள வேண்டும் என்றும், தங்கள் கிளைகளில் எப்போதும் தண்ணீரை விலைக்கு விற்க போவதில்லை என்று உறுதி எடுத்து இருப்பதாகவும் கூறுகிறார்கள். குடிநீருக்கு அலைந்து திரியும் இந்த நேரத்தில் பிரியாணிக்கு இலவசமாக குடிநீரை கொடுப்பதற்கு, வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. தொப்பி வாப்பா பிரியாணி கடையின் வருவாயில் 10 சதவீத தொகையை சமூக நலபணிகளுக்காக ஒதுக்கிட்டு செலவிட்டு வருவதாகவும் கூறுகின்றனர் நிர்வாகிகள்.