அருணாச்சல பிரதேசத்தில் விமான விபத்தில் சிக்கி உயிரிழந்த வினோத் ஹரிகரின் உடலுக்கு கோவை சூலூர் விமானப்படை தளத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. கடந்த 3 ஆம் தேதி விமானப்படைக்கு சொந்தமான ஏ.என்.32 ரக விமானம் அசாம் மாநிலத்திலிருந்து அருணாச்சல பிரதேசம் சென்ற போது சியாங் மலைப்பகுதியில் விபத்துக்கு உள்ளானது.
இதில் விமானத்தில் சென்ற 13 பெரும் உயிரிழந்தனர். அவர்களில் கேரளாவை பூர்வீகமாக கொண்ட வினோத் ஹரிகரனும் ஒருவர். கோவையில் தனியார் கல்லூரியில் படித்து 2011 ஆம் ஆண்டு விமானப்படையில் சேர்ந்து வினோத் பணியாற்றி வந்தார். கோவை சிங்கநல்லூர் பகுதியில் அவரது தாய் வசித்து வருகிறார். விபத்து நடந்து 9 நாள் தேடுதல் முயற்சிக்கு பிறகு உடல்கள் மீட்க்கப்பட்ட நிலையில் வினோத்தின் உடல் கோவை விமான நிலையம் கொண்டு வரப்பட்டது.
அவரின் உடலுக்கு சூலூர் விமானப்படை தளத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன் பிறகு துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் இறுதி சடங்குகள் செய்யப்பட்டு அவரது உடல் தகனம் செய்யபட்டது.