பேரு பெத்த பேரு…தாகங்க நீல் லேது – ஸ்மார்ட் சிட்டியான திருப்பூரின் அவலம்… தனியார் வேன்களில் கட்டண கொள்ளை!

Publish by: கோவை விஜயகுமார் --- Photo :


டாலர் சிட்டி என்று அழைக்கப்படும் திருப்பூரில் ஏராளமான பின்னலாடை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. நிறுவனங்கள் ஒரு லட்சம் கோடி வர்த்தகம் என்ற இலக்கை நிர்ணயித்து உள்நாடு மற்றும் சீனா,ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியினை அதிகப்படுத்தி வருகின்றன.இந்த பின்னலாடை நிறுவனங்களில் தேனி,மதுரை,திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

 

இந்த நிலையில் தீபாவளி, தைப்பொங்கல் போன்ற பண்டிகை காலங்களிலும், திருமணம், சீர் ,காதுகுத்து என்பது போன்ற முகூர்த்த நாட்களிலும் தென் மாவட்ட மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல திருப்பூர் புதிய பேருந்து நிலையம் வரும் பொழுது அங்கு மக்கள் அனுபவிக்கும் கொடுமை சொல்லி மாளாது.புதிய பேருந்து நிலையத்தில் போதுமான அளவில் விளக்குகளோ,குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளோ ஏதும் செய்து தரப்படவில்லை.

 

இதனால் இரவு நேரங்களில் பெண்கள்,குழந்தைகளை அழைத்துக்கொண்டு சொந்த ஊர்களுக்கு செல்வோர் மிகுந்த அச்சத்தினிடையே செல்ல வேண்டிய நிலை உள்ளது.பயணிகளுக்கு தேவையான பாதுகாப்பு என்பது துளியும் இல்லை என்பதே வேதனையான விஷயம். இந்த நிலை பண்டிகை காலங்கள் மட்டுமல்லாது சுபமுகூர்த்த நாட்களில் சற்று அதிகமாகவே இருப்பதாக தெரிகிறது.ஏற்கனவே திருப்பூரில் நாளுக்கு நாள் குற்றச்செயல்கள் அதிகரித்து வரும் நிலையில் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் புதிய பேருந்து நிலையத்தில் குறைந்த பட்சம் குடிநீர்,கூடுதல் விளக்குகள் அமைத்தால் இரவு நேரங்களில் நிகழும் குற்றச்செயல்களை தவிர்க்க இயலும்.

மேலும்,பண்டிகை மற்றும் சுபமுகூர்த்த நாட்களில் அரசுப்போக்குவரத்துக்கழகத்தின் மூலம் முறையாக பேருந்துகள் இயக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. குடும்ப சூழ்நிலை காரணமாக உறவினர்களின் திருமணம், சீர்,காதுகுத்து போன்ற விசேஷங்களுக்கு செல்ல சுபமுகூர்த்த நாட்களில் செல்வோரின் நிலை படுமோசம். இதற்கு முக்கிய காரணம் அரசுப்போக்குவரத்து கழகத்தின் மெத்தனப்போக்கே என்கின்றனர் பயணிகள்.

 

மற்ற நாட்களை காட்டிலும் முகூர்த்த நாட்களுக்கு சொந்த ஊர்களுக்கு செல்வோரின் எண்ணிக்கையை கணக்கிட்டு அதற்கேற்ப கூடுதல் பேருந்துகளை இயக்குவதில்லை.2 மணி நேரத்திற்கு ஒருமுறை தேனி,மதுரை,திண்டுக்கல் உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.இதனால் குடும்பத்தினருடன் வரும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

 

தனியார் பேருந்துகளின் கட்டண கொள்ளை…

பயணிகளின் இந்த நிலையினை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ளும் தனியாருக்கு சொந்தமான வேன், மினி பஸ்களை தென் மாவட்டங்களுக்கு கூடுதல் கட்டணத்தை பெற்றுக்கொண்டு இயக்கி வருகின்றனர். சாதாரணமாக தேனிக்கு செல்ல அரசுப்பேருந்தில் சுமார் 150 ரூபாய் இருந்தால் போதும். ஆனால், தனியார் 350 ரூபாய் பெற்றுகொண்டு பயணிகளை ஏற்றிச்செல்கின்றனர்.இதே போல்,மதுரைக்கு சுமார் 150 ரூபாய் அரசுப்பேருந்தில்,தனியாரில் 350 ரூபாய்.

 

இந்த கட்டண கொள்ளையால் இரு குழந்தைகளை கொண்டுள்ள ஒரு குடும்பம் சொந்த ஊருக்கு செல்ல பேருந்து கட்டணமாக மட்டும் தோராயமாக 1400 ரூபாய் தேவைப்படும்.நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு இந்த கட்டணம் பெரும் சுமையே.இதற்கு முக்கிய காரணம் அரசுப்போக்குவரத்துக்கழகத்தின் மெத்தனப்போக்கே என பயணிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

போக்குவரத்துக்கழகத்தின் இந்த மெத்தனப்போக்கால் பெரிதும் பாதிக்கப்படுவது என்னவோ அடித்தட்டு மற்றும் நடுத்தர குடும்பத்தினர் தான்.அரசுப்பேருந்துகளை முறையாக இயக்கினாலே தனியார் பேருந்துகளின் இந்த கட்டணக்கொள்ளை தடுக்கப்படும் என்பதே நிதர்சனமான உண்மை…தூக்கத்தில் இருந்து கண் விழிக்குமா…திருப்பூர் அரசுப்போக்குவரத்து கழகம்….