தமிழகத்திலும், ஆந்திராவிலும் மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெறவில்லை என்றாலும் இரு மாநில வளர்ச்சிகளிலும் மத்திய அரசு அக்கறையுடன் செயல்படும் என்று நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார்.
ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் தேர்தலில் வெற்றி பெறுவது மட்டும் பாரதிய ஜனதாவின் நோக்கம் இல்லை என்றும் மக்களுக்கு சேவை ஆற்றுவதே தங்களின் நோக்கம் என்றும் கூறியுள்ளார்.
மக்கள் அளித்திருக்கும் மிகப்பெரிய வாய்ப்பை பயன்படுத்தும் வகையில் நாட்டை வளர்ச்சி பாதைக்கு அழைத்துச்செல்வதே தங்களின் குறிக்கோள் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
வலிமையான ஜனநாயகத்தில் மிக முக்கிய பங்காற்றும் தமிழகம் மற்றும் ஆந்திர பிரதேச மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் பிரதமர் கூறினார். மேலும் ஆந்திரா மற்றும் தமிழகத்தின் வளர்ச்சிக்காக மாநில அரசுகளோடு மத்திய அரசு இணைந்து செயலாற்றும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.