தெலுங்கானாவில் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழக்கிறது காங்கிரஸ்!

தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்டிரிய சமீதி கட்சி ஆட்சி புரிந்து வருகிறது. அங்கு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 19 இடங்களை காங்கிரஸ் வென்றது. இதனிடையே 12 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சபாநாயகரை சந்தித்து தெலுங்கானா ராஷ்டிரிய சமீதி கட்சியில் இணைய உள்ளதாக விருப்பம் தெரிவித்துள்ளனர்.

தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் உத்தம் குமார் ரெட்டி ஏற்கனவே தமது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்ட நிலையில் மூன்றில் இரண்டு பங்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆளுங்கட்சியில் இணைவதால் அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சி அந்தஸ்தை காங்கிரஸ் இழக்கும் சூழல் உள்ளது. தெலுங்கானாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் இந்த அதிரடி முடிவு கட்சி மேலிடத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்நிலையில் தெலுங்கானாவில் காங்கிரசை விட தங்களுக்கு அதிகமான எம்.எல்.ஏ.க்கள் இருப்பதால், தங்களை எதிர்க்கட்சியாக அறிவிக்க வேண்டும் என அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முஸ்லிமீன் கட்சி தலைவர் ஒவைசி வலியுறுத்தியுள்ளார்.

தெலுங்கானாவில் அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முஸ்லிமீன் கட்சி சார்பில் 7 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். தனிப்பெரும்பான்மையுடன் தெலுங்கானா ராஷ்டிரிய சமீதி கட்சி உள்ளது. அடுத்த பெரிய கட்சி எங்களுடையது தான். இதுதொடர்பாக விரைவில் ஆளுநரை சந்தித்து முறையிட உள்ளோம்’ என ஒவைசி தெரிவித்தார்.


Leave a Reply