சூலூரில் வெற்றிவாகை சூடப்போவது யார்? காசை செலவழிக்கும் கட்சிகள்! களநிலவரம் சொல்லும் சாட்சிகள்!!

தமிழகத்தில், இடைத்தேர்தல் நடைபெறும் 4 சட்டசபை தொகுதிகளில், நாளை மாலையுடன் பிரசாரம் நிறைவடையும் நிலையில், சூலூர் தொகுதியில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு கட்சியினரிடையே மட்டுமின்றி, பொதுமக்கள் மத்தியிலும் அதிகரித்துள்ளது.

 

தமிழகத்தில் காலியாக உள்ள சூலூர், அரவக்குறிச்சி, ஒட்டபிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், வரும் 19ஆம் தேதி ஞாயிறன்று நடக்கிறது. இந்த தொகுதியின் கள நிலவரம், மற்ற தொகுதிகளில் இருந்து வேறுபட்டுள்ளது.

 

சூலூர் தொகுதியில், 2016 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் சில மாதங்களுக்கு முன்பு, திடீரென மாரடைப்பால் இறந்தார். இதை தொடர்ந்து சூலூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. தேர்தல் ஆணையமும் ஏற்கனவே காலியாக இருந்த அரவக்குறிச்சி, ஒட்டபிடாம், திருப்பரங்குன்றம் தொகுதிகளோடு, இங்கும் தேர்தலை அறிவித்தது.

 

 

சூலூர் சட்டசபை தொகுதியில் இருகூர், கண்ணம்பாளையம், கருமத்தம்பட்டி, மோப்பிரிபாளையம், பள்ளபாளையம், சாமளாபுரம், சூலூர் உள்ளிட்ட பேரூராட்சிகளும்; கிராம்ப்புறங்களில் சூலூர் ஒன்றியம், சுல்தான்பேட்டை ஒன்றியங்களில் பல்வேறு கிராம ஊராட்சிகளும் உள்ளன.

 

ஏற்கன்வே, பல்லடம் சட்டசபை தொகுதியில் இருந்த சூலூர், திருப்பூர் மாவட்டம் உதயமானதும் கோவை மாவட்டத்தில் சூலூர் சட்டசபை தொகுதியாக உருவானது. இந்த தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 2,95,158 பேர். இதில் ஆண் வாக்காளர்கள் 1,45,397. பெண் வாக்காளர்கள் 1,49,743. திருநங்கைகள் 18 பேர்.

 

கடந்த 2011-2016 தேர்தலில், அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த தேமுதிக சார்பில், போட்டியிட்ட பனப்பட்டி தினகரன் வெற்றி பெற்றார். 2016 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக-வை சேர்ந்த கனகராஜ், தன்னை எதிர்த்துப்போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் வி.எம்.சி மனோகரனை விட, 37 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

 

 

தற்போதைய தேர்தலில், அதிமுக சார்பில் கனகராஜின் உறவினர் வி.பி. கந்தசாமி, திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, டிடிவி தினகரனின் அமமுக சார்பில் சுகுமார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

 

 

அதிமுக வேட்பாளர் வி.பி கந்தசாமி:

 

இவர், 2016 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் கனகராஜின் சித்தப்பா மகன் ஆவார். அதிமுக வில் உறுப்பினராக சேர்ந்த ஆண்டு 1980. இதற்கு சுல்தான்பேட்டை ஒன்றிய செயலாளர், இளைஞரணி செயலாளர், அம்மா பேரவை செயலாளராகவும் பதவி வகித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக கோவை புறநகர் மாவட்ட அம்மா பேரவை தலைவராக பதவி வகித்து வருகிறார். 6 ஆண்டுகளாக சூலூர் தொகுதி இணைச்செயலாளராகவும் இருந்து வருகிறார்.

 

அதிமுக வேட்பாளர் கந்தசாமி

 

சுல்தான் பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட வடுகபாளையம் பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் தலைவராக இருந்துள்ளார். இவர் முழுக்க முழுக்க அதிமுக குடும்ப பின்னணியை கொண்டவர். இவர், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வேகம், சுறுசுறுப்பு, அவர் தலைமையில் கோவையில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகள் மற்றும் வைட்டமின் ” ப ” உள்ளிட்டவற்றை நம்பி களத்தில் இறங்கியுள்ளார்.

 

திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமி :

 

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமி, தமிழக சட்டசபைக்கு, பொங்கலூர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். 1991-2011ஆம் ஆண்டுகளில், கோவை மாவட்ட திமுக செயலாளராக பதவி வகித்தவர். அதே கால கட்டங்களில் தமிழக அமைச்சரவையில் வனத்துறை, விளையாட்டு, கால்நடை பராமரிப்புத்துறை,சுற்றுச்சூழல் துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர்.

 

திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமி

 

மேலும், 2006 ஆம் ஆண்டில் ஊரகத்தொழில்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர். முன்னாள் அமைச்சர், பல கல்லூரிகளுக்கு உரிமையாளர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலிக்கு நெருக்கமானவர் என்கிற அடையாளத்துடன் களமிறங்கி இருக்கும் பொங்கலூர் பழனிச்சாமியும், வைட்டமின் ” ப ” கொடுத்தாவது, வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கி உள்ளார்.

அமமுக வேட்பாளர் சுகுமார் :

 

அதிமுக மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளராகவும், புறநகர் மாவட்ட செயலாளராகவும் இருந்தவர் சுகுமார். கடந்த 2009ஆம் ஆண்டில் இருந்து 2014 வரை அதிமுக சார்பில் போட்டியிட்டு பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ளார்.

 

அமமுக வேட்பாளர் சுகுமார்

 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் நடைபெற்ற உட்கட்சி விவகாரத்தால், அதிமுகவில் இருந்து விலகி, அமமுகவில் இணைந்து கோவை புறநகர் மாவட்ட செயலாளராக பதவி வகித்து வருகிறார். முன்னாள் எம்.பி. என்ற முறையிலும், முழுக்க முழுக்க வைட்டமின் “ப” வை நம்பியும் மட்டுமே களத்தில் இறங்கியிருக்கிறார். இதனால், சூலூர் தொகுதி இடைத்தேர்தலில் மும்முனைப்போட்டி நிலவி வருகிறது.

 

அதிமுக-வின் பலம்

 

அதிமுக வேட்பாளரை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரண்டு முறை சூலூர் தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவர், விசைத்தறி தொழிலும், விவசாயமும் நிறைந்துள்ள இப்பகுதியில், திமுக ஆட்சியில் நிலவி வந்த கடும் மின்வெட்டால் பாதித்தது. அதிமுக அரசு பதவியேற்ற சில மாதங்களிலேயே நிலமையை சீர்செய்து மின்மிகை மாநிலமாக மாற்றிக்காட்டியதை சுட்டிக் காட்டி வாக்கு சேகரித்தார்.

 

மேலும், 65 கோடி ரூபாய் நெசவாளர்களின் கடன் தள்ளுபடி, நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் மூலம் பெற்ற வீட்டுக்கடன்கள் அசல் மற்றும் வட்டியுடன் தள்ளுபடி செய்யப்படும்; நெசவுத்தொழிலை பாதுகாக்கும் விதமாக தொழில் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வாக்குறுதிகளால், இத்தொகுதியில் உள்ள நெசவாளர்கள் மற்றும் விவசாயிகள் முகத்தில் நம்பிக்கை தெரிகிறது.

 

துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வமும் இருமுறை பிரச்சாரம் செய்தார். கொங்கு மண்டலத்தில் அசைக்க முடியாத சக்தியாக உள்ள எஸ்.பி.வேலுமணி தலைமையில், அமைச்சர்கள் மாபா. பாண்டியராஜன், பெஞ்சமின் உள்ளிட்டோரும், சூலூரில் முகாமிட்டு களப்பணியாற்றி வருகின்றனர்.

 

அண்மையில் நடைபெற்ற அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி “சூலூர் தொகுதி அதிமுகவின் எஃகு கோட்டை; ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளர் கந்தசாமியை வெற்றி பெறச்செய்ய வேண்டும் ” என்று சூளுரைத்தார். அவர் பேசியது போலவே கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் தீவிரமாக களப்பணியாற்றி வருவது, இக்கட்சியின் பலமாக உள்ளது.

 

அதிமுக-வின் பலவீனம்

 

அதிமுக கூட்டணி கட்சிகளின் சார்பில், த.மா.க. தலைவர் ஜி.கே. வாசன், தேமுதிக சார்பில் பிரேமலதா விஜயகாந்த், சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் சரத்குமார் மட்டுமே இங்கு வந்து பிரச்சாரம் செய்துள்ளனர். கோவையில் செல்வாக்கு கொண்டிருக்கும் பா.ஜ.கவோ, பா.ம.க போன்ற கட்சிகளோ இங்கு பிரசாரம் செய்யாதது, அதிமுக தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை தந்துள்ளது.

 

மேலும், முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுச்சாமிக்கும், இன்னாள் அமைச்சர் வேலுமணிக்கும் இடையே உள்ள பனிப்போரால், வேலுச்சாமி ஆதரவாளர்களும் அதிருப்தியடைந்துள்ளனர். இவர்கள் இத்தொகுதியில் களப்பணியாற்றுவதில்லை என்ற புகாரும் உள்ளது. இதுவும் அதிமுகவின் பலவீனமாகவே கருதப்படுகிறது. அதுமட்டுமின்றி, இயல்பாகவே உள்ள ஆளுங்கட்சிக்கு எதிரான மக்களின் மனஓட்டமும், பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

 

திமுக-வின் பலம்

 

திமுக தலைவர் ஸ்டாலின் பொங்கலூர் பழனிச்சாமியை ஆதரித்து இருமுறை பிரசாரம் செய்துள்ளார். தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி கேபிள் டிவி கட்டணம் குறைப்பு, நெசவுத்தொழிலை காக்க நெசவுத்தொழில் பூங்கா அமைத்தல், மாணவர்களின் கல்வி கட்டணம் தள்ளுபடி, 5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி, விவசாயிகளின் கடன் தள்ளுபடி போன்ற கவர்ச்சிகர அறிவிப்புகளை நினைவுபடுத்தினார்.

 

 

முன்னாள் அமைச்சரும், சூலூர் சட்டசபை தொகுதி தேர்தல் பொறுப்பாளருமான எ.வேலுவின் சுறுசுறுப்பான நடவடிக்கைகள் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு உற்சாகத்தை தந்துள்ளது. கூட்டணி கட்சி சார்பில் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முத்தரசன், ராமகிருஷ்ணன், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் உள்ளிட்டவர்கள் பிரசாரம் செய்துள்ளனர்.

 

நீலகிரி மக்களவை தொகுதி திமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஆ.ராசா சூலூரில் முகாமிட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவது, அக்கட்சிக்கு தெம்பூட்டுவதாக உள்ளது. வேட்பாளரும் முன்னாள் தமிழக அமைச்சர் என்பதும், அதிமுக கோஷ்டிப்பூசலும் திமுகவிற்குள்ள சாதக அம்சங்கள்.

 

திமுக-வின் பலவீனம்

 

சூலூர் சட்டசபை தொகுதி இதுவரை அதிமுகவின் கோட்டையாகவே இருந்து வருகிறது. 1977 ஆம் ஆண்டில் இருந்து 2016 வரை ஆண்டுகளில், 1988இல் மட்டும் திமுகவின் மு. கண்ணப்பன்; 1996ல் திமுகவின் பொன்முடி வெற்றி பெற்றனர். மற்றபடி அதிமுகவின் கையே ஓங்கி இருந்தது. இது திமுகவிற்கு பெரும் சவாலாகவே உள்ளது.

 

மேலும், முன்னாள் எம்.எல்.ஏ. பொன்முடி, பொங்கலூர் பழனிச்சாமி இடையே உள்ள முட்டல் மோதல், மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. இதுவும், திமுகவிற்கு பலவீனமாகவே கருதப்படுகிறது.

 

மேலும், அதிமுக, அமமுகவுடன் ஒப்பிடும் போது, திமுகவினர் வைட்டமின் ” ப ” தருவதற்கு மனமில்லை என்ற பேச்சும் உள்ளது. இது, எதிர்தரப்புக்கு சாதகமாக இருக்கும்.

 

அமமுக பலம் – பலவீனம்!

 

சூலூர் சட்டசபை தொகுதி அமமுக வேட்பாளரான சுகுமார், பொள்ளாச்சித்தொகுதி எம்.பி என்ற ஒரே தகுதியை தவிர, இத்தொகுதிக்கு சம்பந்தமில்லாதவர் என்பது, இவரது பலவீனம். மேலும், பிரச்சாரத்திற்கு டிடிவி-யை விட்டால் வேறு எவருமில்லை என்ற நிலை உள்ளது. ஒரே ஆறுதல் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், இரண்டு நாட்கள் சூலூரில் முகாமிட்டு வாக்குகளை சேகரித்தது தான். அது கைகொடுக்கும் என்று இவர் நம்புகிறார்.

 

வைட்டமின் “ப” மற்றும் டிடிவி தினகரனின் பிரச்சாரம் இரண்டை மட்டுமே நம்பி சுகுமார் களமிறங்கி இருப்பதால், வெற்றியை ருசிப்பது என்பது எட்டாக்கனியாகவே இருக்கும் என்ற கருத்து உள்ளது. எது எப்படியானாலும், இடைத்தேர்தல் நடக்கும் சூலூரில் மழை பெய்கிறதோ இல்லையோ, தற்போது பணமழை கொட்டுகிறது. வாக்காளர்கள் வாயடைத்து போய் நிற்கிறார்கள்.

 

கடைசி கட்டத்தில் நடக்கும் பிரசாரமும், வாக்காளர்களின் மன நிலையும் மட்டுமே, சூலூர் தொகுதி வெற்றியை தீர்மானிக்கும் என்பதில் சந்தேகமில்லை.


Leave a Reply