காசு… பணம்…துட்டு… மணி… மணி!! சூலூர்வாசிகளுக்கு சுக்கிர திசை! திரும்பிய பக்கமெல்லாம் பணமழை!!!

இடைத்தேர்தல் நடைபெறும் சூலூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், முக்கிய கட்சிகள் சார்பில் வாக்காளர்களுக்கு தாராளமாக பண வினியோகம் நடைபெறுவதால், அத்தொகுதிவாசிகளின் காட்டில் பணமழை பொழிவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

கோவை மாவட்டம் சூலூர் தொகுதி இடைத்தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் பிரசாரம் நாளை மாலையுடன் நிறைவுபெறுகிறது. இங்கு, அதிமுக, அமமுக, திமுக, மநீம, நாம்தமிழர் உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களுடன், சுயேச்சை வேட்பாளர்களும் சேர்ந்து, மொத்தம் 22 பேர் களத்தில் உள்ளனர்.

 

பிரதான கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து, அந்தந்த கட்சிகளின் தலைவர்கள், நட்சத்திர பேச்சாளர்கள், கடந்த 15 நாட்களுக்கும் மேலாக சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டனர். வாக்குப்பதிவிற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், பிரச்சாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

 

பிரசாரம் ஒருபுறம் நடந்தாலும், மறுபுறம் வாக்காளர்களுக்கு பணவிநியோகமும் சூடுபிடித்துள்ளதாக, சுயேட்சை வேட்பாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஒவ்வொரு ஓட்டுக்கும் ரூ.2,000 வரை வழங்கப்படுவதாக, புகார் தெரிவித்துள்ளனர். சூலூர் அதிமுக வேட்பாளர் கந்தசாமிக்காக வாக்காளர்களுக்கு, அமைச்சர்களே பண விநியோகம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

எல்லா தெருக்களிலும், கிராமம் தோறும் 25 வாக்காளர்களுக்கு ஒரு பூத் ஏஜண்ட் என நியமித்துள்ள அதிமுகவினர், பணத்துடன் வலம் வந்து கொண்டிருப்பதாகவும், வீடு வீடாக சென்று அதிகாலை நேரத்தில் பணத்தை வழங்குவதாகவும், சுயேச்சை வேட்பாளர்கள் புலம்புகின்றனர். இதில் நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்று, திமுக மற்றும் தினகரனின் அமமுக சார்பிலும், வாக்காளர்களுக்கு தலா ஆயிரம் வீதம், முதல்கட்ட விநியோகம் முடிவடைந்துவிட்டதாக, குமுறுகின்றனர்.

 

சூலூர் தொகுதி சுயேட்சை வேட்பாளர் பிரபாகரன் கூறுகையில், அதிமுக சார்பில் ஓட்டுக்கு 2ஆயிரமும், அமமுக மற்றும் திமுக சார்பில் ஆயிரம் ரூபாயும் வாக்களர்கள் ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. நான் வசிக்கும் கருமத்தம்பட்டி சுற்றுவட்டாரப்பகுதி வாக்காளர்களுக்கு கட்சி பாகுபாடின்றி பணம் விநியோகம் நடந்துள்ளது என்றார்.

 

தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படை என்பது பெயரளவுக்கே இருப்பதாகவும், அரசியல் கட்சிகளின் பண விநியோகத்தை, அதனால் தடுக்க முடியவில்லை என்றும் வேட்பாளர்கள் கவலையோடு தெரிவிக்கின்றனர். அளவுக்கதிகமாக பணமழை பொழிந்து வருதால், சூலூர் இடைத்தேர்தல் ரத்தாகி விடுமோ என்ற அச்சமும் அவர்களுக்கு உள்ளது.

 

ஆனால், இடைத்தேர்தல் என்ற சுக்கிர திசையால், கட்சி பாகுபாடின்றி பணமழை பொழிவது, வாக்காளர்களை உற்சாகமடைய செய்துள்ளது.


Leave a Reply