சர்ச்சையை ஏற்படுத்திய கமலஹாசன் பேச்சு! நடிகர் விவேக் ஓபராய் கடும் கண்டனம்!!

இந்த நாட்டின் முதல் தீவிரவாதியே இந்து தான் என்று பேசிய மக்கள் நீதிமய்யம் தலைவர் கமலஹாசனுக்கு பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

 

இடைத்தேர்தல் நடைபெறும் அரவக்குறிச்சியில், மக்கள் நீதிமய்யம் வேட்பாளரை ஆதரித்து அதன் தலைவர் கமலஹாசன் பேசினார். பள்ளப்பட்டி என்ற இடத்தில், சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் பகுதியில் அவர் பிரசாரம் மேற்கொண்டார்.

 

அப்போது பேசிய கமலஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து தான். முஸ்லீம்கள் இங்கு அதிகம் இருப்பதான் நான் அப்படி பேசவில்லை. இங்குள்ள காந்தி சிலை முன்பு இப்படி சொல்கிறேன். அந்த முதல் தீவிரவாதியின் பெயர், நாதுராம் கோட்சே என்றார்.

 

இதற்கு, பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்தன. சமூக வலைதளங்களிலும் கமலை விமர்சனம் செய்து பலரும் பதிவிட்டு வருகின்றனர். தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை உள்ளிட்ட அக்கட்சி பிரமுகர்களும், கமலின் கருத்து எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

 

 

இந்த நிலையில், பாலிவுட் நடிகரும், தமிழக புயல் பாதிப்பின் போது உதவி செய்தவருமான விவேக் ஓபராய், கமலஹாசனின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து டிவிட்டரில் பதிவிட்ட அவர், நீங்கள் சிறந்த கலைஞர். கலைக்கு எப்படி மதம் என்பது இல்லையோ, தீவிரவாதத்திற்கும் மதம் என்பது இல்லை.

 

கோட்சேவை நீங்கள் தீவிரவாதி என்று சொல்லி இருக்கலாம்; இந்து என்று ஏன் குறிப்பிட்டீர்கள். முஸ்லீம் வாக்காளர்கள் உள்ள பகுதி என்பதாலா? தயவு செய்து நாட்டை துண்டாடாதீர்கள் என்று, தனது பதிவில் விவேக் ஓபராய் குறிப்பிட்டுள்ளார்.

 

கமலஹாசன் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சமூக வலைதளங்களில் பலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.


Leave a Reply