ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடாவிட்டால் போராட்டம் வெடிக்கும்- வைகோ எச்சரிக்கை

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அரசு கைவிடாவிட்டால், எரிமலை போல் மக்களின் போராட்டம் வெடிக்கும் என்று, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எச்சரித்துள்ளார்.

 

இதுகுறித்து, இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:

 

காவிரி பாசனப் பகுதிகளில், மீத்தேன், ஹைட்ரோ கார்பன், பாறைப் படிம எரிவாயு போன்ற நாசகாரத் திட்டங்களைச் செயல்படுத்த மத்திய அரசு முனைந்துள்ளது. இதனால், தமிழகத்தின் வேளாண்மை இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

 

இந்த நிலையில், கடலூர் மாவட்டம் தியாகவல்லி முதல் நாகை மாவட்டம் சீர்காழி வரையில் உள்ள தரைப்பகுதி வட்டாரத்தில் 731 சதுர கி.மீ. ஹைட்ரோ கார்பன் ஆய்வு நடத்த இந்திய அரசின் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு உரிமம் அளிக்கப்பட்டுள்ளது.

 

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் முதல் கடலூர் மாவட்டம் வரை 1794 சதுர கி.மீ. கடல் பகுதி வட்டாரத்திலும்; கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை முதல் நாகை மாவட்டம் புஷ்பவனம் வரையில் 2674 சதுர கி.மீ. நிலப்பகுதி வட்டாரத்திலும் என, இரண்டு வட்டாரங்களில் ஹைட்ரோ கார்பன் ஆய்வு நடத்த வேதாந்தா குழுமத்திற்கும் மத்திய அரசு உரிமம் வழங்கி இருக்கிறது.

 

இதனால் வளம் கொழிக்கும் காவிரி பாசனப் பகுதியின் நிலங்களில் நீர் வளம் பாதிக்கப்படும். கடல்நீர் உட்புகும் ஆபத்து நேரும். விளை நிலங்கள் பாழாகி பயிர் சாகுபடி செய்ய முடியாத பேராபத்து உருவாகும்.

 

எனவே காவிரி டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்தும் முயற்சியை மோடி அரசும், எடப்பாடி பழனிச்சாமி அரசும் கைவிட வேண்டும். இல்லையேல் மக்கள் போராட்டம் எரிமலைபோல் வெடிக்கும் என்று எச்சரிப்பதாக, வைகோ தெரிவித்துள்ளார்.


Leave a Reply