நடிகர் ரஜினியில் அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பு, மே 23ஆம் தேதிக்கு பிறகு இருக்கும் என்று, அவரது சகோதரர் சத்ய நாராயணன் தெரிவித்துள்ளார்.
பல ஆண்டுகளாக நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா இல்லையா என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், நிச்சயம் அரசியலில் குதிப்பேன் என்று அறிவித்தார். அதற்கேற்ப, மாவட்ட வாரியாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு, அதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டன.
இதற்கிடையே நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தல்கள் குறுக்கிட்டன; எனினும், அடுத்த சட்டசபை தேர்தல் தான் தமது இலக்கு என்று அறிவித்துவிட்டு, தற்போது படப்பிடிப்புகளில் கவனம் செலுத்தி வருகிறார். இன்னமும் கட்சி பெயரோ, கொடியோ அறிவிக்கப்படவில்லை.
ரஜினிகாந்தின் கட்சி பெயர், தீவிர அரசியல் பணி குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. இந்த நிலையில், வரும் 23ஆம் தேதி மக்களவை தேர்தல் முடிவுக்கு பிறகு, ரஜினியின் அரசியல் பயணம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று, அவரது சகோதரர் சத்தியநாராயணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, திருச்சியில் அவர் அளித்த பேட்டியில், மே 23-க்கு மேல் தமது அரசியல் பிரவேசம் பற்றி ரஜினி அறிவிப்பார். அவர் அரசியலுக்கு வருவதில் தாமதமாவது நல்லது தான். அதே நேரம், விரைவில் அரசியலுக்கு வந்துவிடுவார் என்றார். மேலும் ரஜினியின் பெற்றோருக்கு திருச்சியில் ரசிகர் ஒருவர் கட்டிய கோவிலை, ரஜினி பார்வையிட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.