கடந்த 2014இல் பிரதமர் மோடியை புகழ்ந்து அவரது படத்தை அட்டைப்படத்தில் வெளியிட்ட அமெரிக்காவின் டைம் இதழ், தற்போது அவரை, இந்தியாவின் பிளவுவாதிகளின் தலைவர் மோடி என்று சாடியுள்ளது.
அமெரிக்காவில் வெளியாகும் ‘டைம்ஸ்’ இதழ், மிகவும் பிரபலமானது. உலகில், 2 கோடிக்கும் அதிகமான வாசகர்களை, அது கொண்டிருக்கிறது. இந்த இதழின் அட்டையில் படம் இடம் பெயருவது, மிகப்பெரிய விஷயமாக கருதப்படுகிறது.
கடந்த 2014, 2015, 2017ஆம் ஆண்டுகளில், உலகின் 100 சக்திவாய்ந்த மனிதர்கள் பட்டியலில் பிரதமர் மோடியை தேர்ந்தெடுத்து, இந்த இதழ் கவுரவப்படுத்தியது. இந்நிலையில் தற்போது தேர்தல் நடக்கும் நேரம் பார்த்து, பிரதமர் மோடியை விமர்சனம் செய்து, கட்டுரை வெளியிட்டு உள்ளது.
மே 20ஆம் தேதியிட்ட இதழில், பிரதமர் மோடியின் ஓவியத்தை அட்டையில் அச்சிட்டு, ‘இந்தியாவின் பிளவுவாதிகளின் தலைவர்’ என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டுள்ளது. அதாவது ஜனநாயக நாடான இந்தியா, பிரதமர் மோடி அரசு மதங்களால் பிளவுபடுத்தி வருவதாக, ஆதீஷ் தஸீர் என்பவர் கட்டுரை எழுதியுள்ளார்.
இந்தியாவின் மதச்சார்பின்மை, பத்திரிகை சுதந்திரம் ஆகியன, மோடியின் பா.ஜ.க. ஆட்சியில் சிதைக்கப்பட்டுள்ளதாக, அதில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் தேர்தல் நடைபெற்று வரும் நேரத்தில், மோடிக்கு எதிரான கட்டுரை பிரபல இதழிலில் வெளியாகி இருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.