இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி, சிசு பலி! சொந்த கிளினிக் மீது மட்டுமே டாக்டர்கள் அக்கறை என புகார்!

இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிறைமாத கர்ப்பிணி, சிசு உயிரிழந்தது. இதற்கு மருத்துவர்களின் அலட்சியமே காரணம் என்று உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

 

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் சுந்தரமுடையான் அருகே பிள்ளைமடம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன், 35. இவர், இராமநாதபுரம் வனத்துறை அலுவலகத்தில் வேட்டைத் தடுப்பு காவலர். இவரது மனைவி லட்சுமி, 31. இவர்களுக்கு 8 வயது ஆண் குழந்தை உள்ளது.

 

இதற்கிடையே, 2வது முறை கர்ப்பம் தரித்த லட்சுமி, மண்டபம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடர் சிகிச்சை பெற்று வந்தார். நிறை மாத கர்ப்பிணியான லட்சுமிக்கு, மே 7 ஆம் தேதி பிரசவம் எதிர்பார்க்கப்பட்டது. பிரசவநாளை விட 2 நாட்கள் கடந்தையடுத்து, இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் நேற்று முன் தினம் இரவு அனுமதிக்கப்பட்டார்.

 

உயிரிழந்த கர்ப்பிணி லட்சுமி

 

சுக பிரசவத்திற்காக டாக்டர்கள் காத்திருந்த நிலையில், நேற்று காலை சிசுவின் தலை வெளியே தெரிந்தது. அச்சமடைந்த லட்சுமியின் உறவினர்கள், அறுவை சிகிச்சை செய்யுமாறு மருத்துவ பணியாளர்களை வற்புறுத்தினார். ஆனால், டாக்டர்களின் அதை கேட்கதாக நிலையில், சிறிது நேரத்தில் துடிதுடித்து தாயும், சேயும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

 

இதனால் ஆவேமடைந்த லட்சுமியின் உறவினர்கள், அவரது உடலை வாங்க மறுத்தனர். டாக்டர்களின் சமரசத்தையடுத்து, லட்சுமியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து, விரிவான விசாரணைக்கு ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் உத்தரவிட்டுள்ளார் .நோயாளிகளின் சிகிச்சையில் மெத்தனப்போக்கு காட்டும் டாக்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

 

இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வரும் அனைவருக்கும், தனிப்பட்ட முறையில் மருத்துவமனை உள்ளது. இதனால், அரசு மருத்துவமனை பணிகளில் போதிய கவனம் செலுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

 

இரு அப்பாவி உயிர்கள் பலியான நிலையில், இங்கு பணிபுரியும் அனைத்து மருத்துவர்களையும் பணியிட மாற்றம் செய்வது ஒன்றே இதற்கு தீர்வு என்று, நோயாளிகளும், சமூக ஆர்வலர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.


Leave a Reply