மே 27இல் மு.க.ஸ்டாலின் பதவியேற்பு விழா? கலைவாணர் அரங்கை தயார் செய்யும் திமுகவினர்

தமிழக சட்டசபை இடைத்தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றுவது உறுதி என்ற நம்பிக்கையோடு, பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகளை திமுக தலைமை துவக்கிவிட்டதாக, பெயர் குறிப்பிட விரும்பாத கட்சி நிர்வாகிகள் ‘குற்றம் குற்றமே’ இதழுக்கு தெரிவித்தனர்.

 

மக்களவை மற்றும் சட்டசபை இடைத்தேர்தல் முடிவுகள் வரும் 23ஆம் தேதி வெளியாகிறது. இடைத்தேர்தல் நடந்த மொத்தம் உள்ள 22 சட்டசபை தொகுதிகளில் நிச்சயம் அதிக இடங்களில் வெற்றி கிடைக்கும்; அதன் மூலம் அதிமுக அரசை கவிழ்த்துவிடலாம் என்ற கனவுடன் மு.க. ஸ்டாலின் உற்சாகத்துடன் வலம் வருகிறார்.

 

அதேபோல், மே 23ஆம் தேதி அதிமுக அரசு கவிழும்; அதையடுத்து ஆட்சி அமைக்க மு.க. ஸ்டாலின் உரிமை கோருவார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில், திமுக நிர்வாகிகள் மட்டுமின்றி, மூத்த தலைவர்களே உள்ளனர்.

பதவியேற்பு விழாவுக்கு திமுகவினரின் பரிசீலனையில் உள்ள சென்னை கலைவாணர் அரங்கம்

எனவே, எப்படியும் மே கடைசி வாரத்தில், தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்பார் என்ற எண்ணத்தோடு, பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகளை திமுக தொடங்கிவிட்டதாக நிர்வாகிகள் மத்தியில் பேச்சு நிலவுகிறது.

 

இதுபற்றி, பெயர் வெளியிட விரும்பாத திமுக நிர்வாகி ஒருவர் “குற்றம் குற்றமே” இதழுக்கு அளித்த தகவலில், மே 27ஆம் தேதி ஸ்டாலின் பதவி ஏற்பதற்கு என்று நாள் குறித்துவிட்டனர். அதற்கான ஏற்பாடுகளும் காதும் காதும் வைத்தாற்போல் நடக்கிறது.

 

சென்னை நேரு விளையாட்டு அரங்கம்

 

சென்னை கலைவாணர் அரங்கம், அல்லது நேரு உள்விளையாட்டு அரங்கில் பதவியேற்பு விழா நடத்த முடிவாகியுள்ளது. தேசிய அளவில் எந்த தலைவர்களை அழைப்பது என்ற பட்டியலும் தயாராகி வருவதாக, அவர் தெரிவித்தார்.

 

ஆனால், கட்சியில் உள்ள சில சீனியர்கள், இதுபோன்ற அதீத நம்பிக்கை கடைசி நேரத்தில் பெருத்த ஏமாற்றத்தில் முடியும். மிதமிஞ்சிய கற்பனை கூடாது; எதுவானாலும் தேர்தலுக்கு பிறகு செய்து கொள்ளலாமே என்று, அறிவுரை கூறியுள்ளனர்.


Leave a Reply