முதல்வர் பதவிக்கு குறி வைக்கிறாரா வேலுமணி? ‘அண்டர் கிரவுண்ட்’ பாலிடிக்ஸால் அதிரும் அதிமுக!!

அதிமுகவில் நிலவும் நெருக்கடியை பயன்படுத்தி, முதல்வர் பதவியை பிடிக்க, உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி முயற்சிப்பதாக கசியும் தகவல்கள், அக்கட்சி வட்டாரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

 

தேர்தல் முடிவுகள் நெருக்கி வருகின்றன. வரும் மே 23-ஆம் தேதிக்கு பிறகு தமிழகத்தில் என்ன நடக்கும்? அதிமுக அரசு தப்புமா? திமுக ஆட்சியை பிடிக்குமா என்ற கேள்வி பலரது மனதிலும் எழுந்த வண்ணம் உள்ளன.

 

 

இடைத்தேர்தல் முடிவுகள் ஒருவேளை கைகொடுக்காவிட்டால் என்ன செய்வது? மத்தியில் மோடி மீண்டும் பதவிக்கு வந்தாலும், எவ்வளவு நாட்கள் அவர் முட்டுக் கொடுப்பார் என்ற சந்தேகங்களால் அதிமுக அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் பலரின் மத்தியில் ஒருவித கவலை தொற்றிக் கொண்டுள்ளது.

 

இதனால், கோவில் கோவிலாக பரிகார பூஜைகள், சிறப்பு யாகம் என்றெல்லாம் சிலர் இறங்கிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. இன்னும் சிலர் கேரள தந்திரிகளை வரச் சொல்லி, தங்கள் எதிர்கால திட்டம் பற்றி ஆலோசனை கேட்கிறார்கள்.

 

ஆனால், மூத்த அமைச்சரும், கட்சியில் அதிகாரம்மிக்கவராக கருதப்படுபவரும், கொங்கு மண்டல அதிமுகவை தன் கைக்குள் வைத்திருப்பவருமான உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணியின் நடவடிக்கைகள் வேறுமாதிரியாக இருப்பதாக, அதிமுக வட்டாரங்களில் ஒரு பேச்சு நிலவுகிறது.

 

 

தற்போது அதிமுகவில் நிலவும் இக்கட்டான நிலையை பயன்படுத்தி, முதலமைச்சர் பதவிக்கு அவர் அச்சாரமிடுவதாக, கட்சிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எதற்கெடுத்தாலும் டெல்லிக்கு சென்றுவந்து, அங்கு தனக்கென செல்வாக்கை வளர்ந்துக் கொண்டுள்ள அவர், இதற்காக பாஜக தலைவர்களின் உதவியை நாடியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

இந்த விவகாரத்தில் வேலுமணிக்கும், மத்தியில் பாஜக தலைவருக்கும் பாலமாக, சர்ச்சைக்குரிய ஒரு சாமியார் இருப்பதாகவும் அதிமுக வட்டாரங்களில் பேசிக் கொள்கிறார்கள்.

 

தேர்தல் முடிவுகளை பொருத்தவரை, கொங்கு மண்டலத்தில் அதிமுக கணிசமாக வெற்றிபெற வாய்ப்புள்ளதாக நம்பப்படுகிறது. அந்த வெற்றியை சாக்காக வைத்து, தனது செல்வாக்கை காட்டி, முதல்வர் பதவிக்கு காய் நகர்த்தினால் தான் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை எளிதாக பெறலாம் என்று அமைச்சர் கணக்கு போடுகிறாராம்.

 

எனவே, தேர்தல் முடிவுகள் வெளிவரும் வரை அமைதியாக இருந்துவிட்டு, முடிவை பொருத்து அடுத்த காய்களை நகர்த்துவது என்ற திட்டத்தில் அமைச்சர் இருப்பதாக, அதிமுகவினர் பேசிக் கொள்கிறார்கள்.

 

மொத்தத்தில், வரும் 23ஆம் தேதி தேர்தல் முடிவுகள், பொன்மனச் செம்மலும், புரட்சி தலைவியும் கட்டிக்காத்த மாபெரும் இயக்கமான அதிமுகவின் எதிர்காலத்தை தீர்மானிப்பதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.


Leave a Reply