174 கி.மீ. வேகத்தில் கனமழையுடன் கரை கடந்தது ஃபனி! 43 ஆண்டில் உருவான வலுவான புயலால் திணறிய ஒடிசா!

கடந்த 43 ஆண்டுகளில் மிக வலிமையானதான ஃபனி புயல், மணிக்கு 174 கி.மீ. வேகத்தில் பலத்த சூறைக்காற்று, கனமழைக்குக்கு மத்தியில் ஒடிசாவில் கரையை கடந்தது. இதனால், கடலோர மாவடங்களில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

 

தமிழகத்தை தாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஃபனி புயல் திசை திரும்பி, இன்று ஒடிசா மாநிலத்தில் கரை கடந்துள்ளது. ஒடிசாவின் கோபால்பூர் – சந்த்பாலி இடையே ஃபனி புயல் கரையை கடந்துள்ளது. இதனால், ஒடிசாவின் பல பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை தீவிரமாக பெய்து வருகிறது.

 

குறிப்பாக, புரி பகுதியில் 142 கி.மீ. முதல், 174 கி.மீ. வரை சூறைக்காற்று வீசியது. இதனால், வீடுகள், கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

 

 

கடந்த 43 ஆண்டுகளில் இதுபோன்ற வலுவான புயல் ஒன்று உருவாகி கரையை கடந்ததில்லை ; புயலின் கோர தாண்டவத்தால், ஒடிசாவின் கடலோர மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

 

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலோர மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 10 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பேரிடர் மீட்பு படையினரும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

 

 

ஃபனி புயல் கரை காரணமாக, கலிங்கப்பட்டினம், பீமுனிபட்டினம் துறைமுகங்களில் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. விசாகப்பட்டினம், கங்காவரம் துறைமுகங்களில் 8ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

 

ஒடிசாவில், 1999 ம் ஆண்டு ஏற்பட்ட புயல் பாதிப்பில் சுமார் 10,000 பேர் உயிரிழந்தனர். அப்போது காற்றின் வேகம் மணிக்கு 270 முதல் 300 கி.மீ., வேகத்தில் இருந்தது. தற்போதைய புயலால் குடிசை வீடுகள், கூரை வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன. சாலைகள் மற்றும் பயிர்கள் பெரிய அளவில் பாதிப்பை சந்தித்துள்ளன.

 

அடுத்த 6 மணி நேரத்திற்கு ஒடிசாவில் மோசமான வானிலையே நிலவும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால், ரயில், சாலை, விமான போக்குவரத்து ஒடிசாவில் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. புவனேஸ்வர் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. ஒடிசா வழியாக செல்லும் 200க்கும் அதிகமான ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பரதிப், கோபால்புர் மற்றும் தம்ரா துறைமுகங்களும் மூடப்பட்டுள்ளன.

 

ஒடிசாவில் 4852 புயல் மற்றும் வெள்ள நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 28 தேசிய பேரிடர் மீட்புப் படை, 20 ஒடிசா பேரிடர் அதிவிரைப்படை, 525 தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நிவாரண பொருட்களை கொண்டு செல்ல 3 கடற்படை கப்பல்கள், ஹெலிகாப்டர்கள், மீட்புப்படை விமானங்கள் ஆகியன தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.


Leave a Reply