ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தலைவரான மசூத் அசாரை, ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில் சேர்க்க சீனா இன்று ஒப்புக் கொண்டுள்ளது. இது, இந்தியாவின் ராஜதந்திர முயற்சிக்கு கிடைத்த பெரும் வெற்றியாக கருதப்படுகிறது.
புல்வாமா தாக்குதலுக்குக் காரணமான ஜெய்ஷ் -இ- முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரை, சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க இந்தியா முயற்சி மேற்கொண்டது. ஆனால், பாகிஸ்தானின் நட்பு நாடான சீனா, தொடர்ந்து முட்டுக்கட்டைப் போட்டு வந்தது. இவ்வாறு, ஒருமுறை அல்ல நான்காவது முறை, இந்த தடையை சீனா உருவாக்கியது.
எனினும், ராஜீய ரீதியாக சீனாவுக்கு அழுத்தம் கொடுத்த இந்தியா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. அதற்கு தற்போது பலன் கிடைத்துள்ளது. சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில் மசூத் பெயரை சேர்க்கும் விஷயத்தில் சீனா இறங்கி வந்துள்ளது. அதன்படி, மசூத் அசாரை, ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில் சேர்க்க சீனா இன்று ஒப்புக் கொண்டுள்ளது.
சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டிருப்பதன் மூலம் அவரது ஜெய்ஷ்-இ- முகமது அமைப்பிற்கு சர்வதேச அளவில் நிதி திரட்டுவது தடுக்கப்படும். மசூத் அசார் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தண்டனை பெற்றுத்தரவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளில் இது முக்கிய வெற்றியாக கருதப்படுகிறது. இந்த அறிவிப்பு வெளியாவதற்கு முன்னதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை, சீன அதிபர் ஷை ஜின்பிங் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.