நடிகர் விஷால் தொடர்ந்த வழக்கில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

தயாரிப்பாளர் சங்கத்துக்கு தனி அதிகாரி நியமித்ததற்கு எதிராக நடிகர் விஷால் தொடர்ந்த வழக்கில், தமிழக அரசு பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

 

நடிகர் விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்கங்கத்தில், கணக்குகள் முறையாக பராமரிக்கப்படவில்லை என்று ஒரு தரப்பினர் குற்றம்சாட்டினர். மேலும், விஷால் தரப்பினருக்கும், எதிர் தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டதால், தயாரிப்பாளர் சங்கத்திற்கு தமிழக அரசு பூட்டு போட்டது.

 

இதை எதிர்த்தும், தயாரிப்பாளர் சங்கத்தை கலைத்து, அரசு சார்பில் அதிகாரி ஒருவரின் தலைமையில் சங்கம் செயல்பட வேண்டும் எனவும், எதிர் தரப்பினர் வழக்கு தொடர்ந்தனர். இதை தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத்தை நிர்வகிக்க, தமிழக அரசு சார்பில், மாவட்ட பதிவாளர் அந்தஸ்தில் உள்ள சேகர் என்பவர் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

 

சிறப்பு அதிகாரியின் நியமனத்தை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஷால் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் தயாரிப்பாளர் சங்கத்துக்கு தனி அதிகாரி நியமிக்கப்பட்டது குறித்து மே 7 ஆம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் எனக்கூறி நோட்டீஸ் அனுப்பியது.


Leave a Reply