ரபேல் வழக்கில் மேலும் கால அவகாசமா? மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டிப்பு!

ரபேல் சீராய்வு மனு விவகாரத்தில் மத்திய அரசு மே 6 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று, உச்சநீதிமன்றம் கண்டிப்புடன் கூறியது.

 

பிரான்சிடம் இருந்து ரூ. 58 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ரபேல் போர் விமானங்களை வாங்க, மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது. இதில், பெரிய அளவில் முறைகேடு நடந்திருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது.

 

இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், விசாரணை கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தது. எனினும், முன்னாள் அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி மற்றும் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆகியோர் சீராய்வு மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீதான தீர்ப்பை கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி உச்சநீதிமன்றம் வழங்கியது.

 

அதில் ரபேல் விவகாரத்தில் ஆவணங்கள் மீது விரிவான விசாரணை நடத்தப்படும் எனவும், பத்திரிகையில் வெளியான ஆவணங்களை விசாரிக்கக் கூடாது என்ற மத்திய அரசின் கோரிக்கை நிராகரித்தும், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

 

 

இந்த நிலையில், ரபேல் சீராய்வு மனு தொடர்பான வழக்கு, இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், வரும் மே 6 ஆம் தேதிக்குள் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும். மே 4ம் தேதி மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். கால அவகாசம் கேட்ட மத்திய அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.


Leave a Reply