மதுரையில் மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் சித்திரை திருவிழா கடந்த 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பட்டாபிஷேகம் நேற்று முன்தினம் நடந்தது. அன்று மதுரையின் அரசியாக மீனாட்சி அம்மனுக்கு பட்டம் சூட்டப்பட்டது.

இதைத்தொடர்ந்து மீனாட்சி, 8 திசைகளிலும் சென்று தேவர்களை வென்று இறைவன் சுந்தரேசுவரரிடம் அடையும் திக்கு விஜயம் நேற்று நடந்தது.

சித்திரை திருவிழாவின் முத்திரை பதிக்கும் மற்றொரு நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் மேற்கு-வடக்கு ஆடி வீதியில் இன்று காலை கோலாகலமாக நடந்தது. இதையொட்டி திருக்கல்யாண மண்டபம் வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

திருக்கல்யாணத்தையொட்டி அதிகாலை 4 மணியளவில் சுவாமி- அம்மன் சித்திரை வீதிகளில் வெள்ளி சிம்மாசன வாகனத்தில் வலம் வந்தனர். அதன் பிறகு கன்னி ஊஞ்சலாகி திருக்கல்யாண மேடையில் எழுந்தருளினர். முன்னதாக திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை, பவளக்கனிவாய் பெருமாள் ஆகியோர் வரிசையாக வந்தனர்.


அனைத்து தெய்வங்களும் திருக்கல்யாண மேடையில் வீற்றிருந்தது கண் கொள்ளா காட்சியாக இருந்தது. மேடையின் வலதுபுறத்தில் பவளக்கனிவாய் பெருமாள், மீனாட்சி அம்மன், சுவாமி-பிரியாவிடை, சுப்பிரமணியர், தெய்வானை என அமர்ந்து அருள்பாலித்தனர். மீனாட்சி அம்மன் பட்டுச்சேலை அணிந்து வைர கிரீடம், வைர மூக்குத்தி, பவளக்கல் பதித்த மாலைகள் அணிந்திருந்தார். சுந்தரேசுவரர் வெண்பட்டும், ஊதா நிற கல் பதித்த வைர கிரீடமும் அணிந்திருந்தார்.

குலசேகரப்பட்டர் வழி சிவாச்சாரியார் சுந்தரேசுவரராகவும், உக்கிர பாண்டியர் பட்டர் வழி சிவாச்சாரியார் மீனாட்சியாகவும் வேட மேற்று மாலை மாற்றி திருக்கல்யாண நிகழ்ச்சியை நடத்தினர். பழக்கூடையில் திருமாங்கல்யம் உள்ளிட்டவற்றை வைத்து பூஜை செய்யப்பட்டது. பின்னர் யாகசாலை பூஜைகள் தொடங்கியது.
விநாயகர் பூஜை, காப்பு கட்டுதல், பாலிகை பூஜை, தாரை வார்த்தல், தங்கம், வெள்ளி பன்னீர் செம்புகள் மூலம் பன்னீர் தெளித்தல், கொன்றை மலர் மாலையுடன் ஆடை சாற்றுதல், சுவாமி-அம்மன் பிரதிநிதிகள் மாலை மாற்றுதல் ஆகிய பூஜைகள் நடந்தன.

இன்று காலை 9.52 மணிக்கு மிதுன லக்கனத்தில் மீனாட்சி திருக்கல்யாணம் நடந்தது. மல்லிகை மலர்களால் சுற்றப்பட்ட தங்கத்தில் வைரம் பதித்த மங்கல நாண் பக்தர்களிடம் காட்டப்பட்டதுடன், சுவாமி- அம்மன், பிரியாவிடை முன்பும் 3 முறை காட்டப்பட்டது. அதன்பின்பு வேத மந்திரங்கள் முழங்க, மேளதாளம் இசைக்க மீனாட்சி அம்மன் கழுத்தில் மங்கல நாண் அணிவிக்கப்பட்டது.

அப்போது பக்தர்கள் சுந்தரேசுவரா… மீனாட்சி அம்மன் என்று முழங்கினர். மேடையின் மேல் புறத்தில் இருந்து மலர்கள் அம்மன்-சுவாமி மீது தூவப்பட்டது. மீனாட்சி அம்மனுக்கு மங்கல நாண் அணிவிக்கப்பட்டதும் திருக்கல்யாண நிகழ்ச்சியை காண வந்திருந்த திரளான பெண் பக்தர்கள் தங்களது தாலிக்கயிறை புதிதாக மாற்றி அதில் குங்குமம் இட்டு ஒற்றிக் கொண்டனர்.

அம்மனை தொடர்ந்து பிரியாவிடைக்கு மங்கல நாண் அணிவிக்கப்பட்டது. திருக்கல்யாணத்தை அடுத்து அக்கினி வலம் வருதல், சுவாமி-அம்மன் பிரதிநிதிகள் மேடையை வலம் வருதல், திருமாங்கல்யத்தில் தங்க பன்னீர் செம்பில் பன்னீர் தெளித்தல், நெய்வேத்தியம், ஆசீர்வாதம் என பூஜைகள் நடந்தன. அதன் பின்னர் தீபாராதனை காட்டப்பட்டது.

திருக்கல்யாணம் முடிந்ததும் சுவாமி-அம்மன் உள்ளிட்ட தெய்வங்கள் மேடையில் இருந்து புறப்பாடாகி பழைய திருக்கல்யாண மகாலுக்கு சென்றனர். இன்று இரவு நடைபெறும் அனந்தராயர் பூப்பல்லக்கில் மீனாட்சி அம்மனும், தங்க அம்பாரியுடன் கூடிய யானை வாகனத்தில் பிரியா விடையுடன் சுந்தரேசுவரரும் வலம் வருகிறார்கள்.

அப்போது மாசி வீதிகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு நின்று சுவாமி-அம்மனை வழிபடுகிறார்கள்.


Leave a Reply