வேலூர் தொகுதி தேர்தல் ரத்து எதிர்த்து அதிமுக வழக்கு! சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணை

வேலூர்  நாடாளுமன்ற தொகுதி தேர்தல் ரத்து செய்த தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து அதிமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

 

தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு, நாளை (18ஆம் தேதி) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே தி.மு.க. பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடும் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்தது என்று கூறி, வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

 

கடந்த மாதம் 27ஆம் தேதி  காட்பாடியில் உள்ள துரைமுருகனின் இல்லம், அவரது மகன் கதிர் ஆனந்த் நடத்தும் பொறியியல் கல்லூரி உள்ளிட்ட இடங்களில் வருமானவரி துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

 

அதேபோல், திமுக பிரமுகர் ஒருவரின் வீட்டிலும் சோதனை நடந்தது. அந்த சோதனைகளில் கட்டு கட்டாக ரூ.10 கோடிக்கும் அதிகமான தொகை சிக்கியதாக தகவல்கள் வெளியாகின. இந்த தொகை, வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக வைக்கப்பட்டிருந்ததற்கு ஆதாரங்கள் சிக்கியதாகவும் கூறப்பட்டது.

 

இதையடுத்து, வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக, தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று நேற்று குடியரசு தலைவர் அறிவிப்பு வெளியிட்டார். எனினும், ஆம்பூர், குடியாத்தம் சட்டசபை தொகுதிகளில் திட்டமிட்டபடி நாளை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில்,  வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து அதிமுக சார்பில் ஏ.சி. சண்முகம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த மனு இன்று நீதிபதி விசாரணைக்கு வரவுள்ளது.


Leave a Reply