அறந்தாங்கி: அறந்தாங்கியில் நள்ளிரவில் பெரியார் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தியதால் பரபரப்பு நிலவுகிறது. இதை கண்டித்து தி.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு மருத்துவமனை அருகே பெரியார் சிலை உள்ளது. நேற்று நள்ளிரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பெரியார் சிலையின் தலையை துண்டித்துவிட்டு ஓடிவிட்டனர்.
இன்று காலை பார்த்த போது சிலை சேதப்படுத்தப்பட்ட விஷயம் தெரிந்தது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினர் இதுபற்றி விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே சம்பவ பகுதிக்கு விரைந்த உள்ளூர் திராவிடர் கழகத்தினர், சிலை உடைப்பை கண்டித்து அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். சிலையை சேதப்படுத்தியவர்களை கைது செய்யும் வரை தங்களின் போராட்டத்தை தொடருவோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.
பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவத்தால் அறந்தாங்கியில் இன்று காலை முதலே பரபரப்பு நிலவி வருகிறது.
—