இராமநாதபுரம் நாடாளுமன்ற மக்களவை தொகுதி தேர்தலில் அதிமுக., கூட்டணியில் பாஜக., வேட்பாளராக தமிழக முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன், திமுக., கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி, அமமுக., வேட்பாளர் தமிழக முன்னாள் அமைச்சர் வ து நடராஜன் மகன் ஆனந்த் உள்பட 23 பேர் போட்டியின்றனர். பாஜ., முஸ்லிம் லீக், அமமுக., வேட்பாளர்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. பாஜக., வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக தமிழக அமைச்சர் மணிகண்டன், அன்வர் ராஜா எம்.பி., மற்றும் அதிமுக., பாஜக., கூட்டணி கட்சியினர் மார்ச் 25 முதல் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் ஏப்.1ல் பெரியபட்டினம், ஏப்.5ல் கீழக்கரை பகுதியில் வாக்கு சேகரிக்கச் சென்ற பாஜ., அதிமுக., வினருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பெரியபட்டினத்தில் மர்ம கும்பல் காலி மது பாட்டில் வீசியதில் திருப்புல்லாணி ஒன்றிய அவைத் தலைவர் உடையத் தேவன் காயமடைந்தார். இந்நிலையில், மண்டபம் ஒன்றியப் பகுதி வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்த நயினார் நாகேந்திரன் மண்டபம் பேரூராட்சி பகுதியில் அமைச்சர் மணிகண்டன், அன்வர் ராஜா எம்.பி., பாஜ மாநில துணைத் தலைவர் குப்புராமு உள்பட ஏராளமானோர் மண்டபம் ஒன்றிய அதிமுக., செயலர் தங்கமரைக்காயர் வீட்டிற்கு வாக்கு சேகரிக்கச் சென்றனர்.
சேதுநகர் சந்திப்பு வழியாக சென்ற போது அப்போது அப்பகுதி வாலிபர்கள், வேட்பாளர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளை தெருவிற்குள் செல்ல விடாமல் தடுத்தனர். இதனால் அதிமுக., பாஜக., தொண்டர்களுக்கும் அப்பகுதியினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டதால் பதற்றம் நிலவியது. வாக்கு வாதத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் சமரசம் பேசி கலைந்து போகச் செய்தனர். மண்டபம் பேரூராட்சி பகுதியில் தொடரும் பதற்றத்தை தவிர்க்க அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.