சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்கு தடை! சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

சென்னை: சேலம்- சென்னை இடையிலான 8 வழிச்சாலை திட்டத்துக்கு தமிழக அரசு நிலம் கையகப்படுத்தியது செல்லாது என்று உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.

 

தமிழக அரசு, சென்னை – சேலம் இடையே ரூ. 10 ஆயிரம் கோடி செலவில் 8 வழிச்சாலை அமைக்க திட்டமிட்டது. இதற்காக சேலம், தர்மபுரி, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஆயிரத்து 900 ஹெக்டேர் நிலங்களை கையகப்படுத்த, அரசு அறிவிப்பு வெளியிட்டது.

 

நிலம் கையகப்படுத்தும் முடிவுக்கு தடை விதிக்க கோரியும், திட்டத்தை முழுமையாக ரத்து செய்யக் கோரியும், பாதிக்கப்பட்ட  5 மாவட்டங்களை  சேர்ந்த விவசாயிகள், தருமபுரி எம்.பி அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

 

 

உயர் நீதிமன்ற நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அமர்வு, இம்மனுக்களை விசாரணை செய்து வந்தது. திட்டத்திற்காக நிலங்களை கையகப்படுத்த, நீதிபதிகள் இடைக்கால தடை விதித்தனர்.

 

இந்நிலையில், அனைத்து தரப்பிலும் இறுதி வாதங்கள் முடிவடைந்து, மூன்று மாதங்களுக்கு பிறகு, இன்று காலை சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

 

அதன்படி, சென்னை – சேல்ம 8 வழிச்சாலை திட்டத்திற்கான தமிழக அரசின் அறிவிப்பாணையை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

 

இத்திட்டத்திற்காக தமிழக அரசு நிலம் கையகம் செய்தது செல்லாது என்று அறிவித்துள்ள உயர் நீதிமன்றம், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின்  அனுமதி பெற்ற பிறகே இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென்றும் அறிவுறுத்தியுள்ளது.

 

வருவாய் ஆவணங்களில் செய்யப்பட்ட மாற்றத்தை 8 வாரத்திற்குள் சரி செய்து உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். எனவே 2018 ம் ஆண்டு இதற்காக பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்து செய்யப்படுகிறது என்று தீர்ப்பளித்தனர். திட்டம் பற்றி முழுமையாக ஆய்வு மேற்கொள்ளாமல் தொடங்கப்பட்டுள்ளதாக நீதிபதிகள் கூறியதாக, விவசாயிகள் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். இத்தீர்ப்பின் முழுவிவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

 

மக்களவைத் தேர்தல் நடைபெறும் சூழலில் சென்னை உயர்நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு, தமிழக அரசுக்கு பின்னடைவாகவே கருதப்படுகிறது. இது அதிமுக வட்டாரத்தில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரம் இந்த தீர்ப்புக்கு விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

 


Leave a Reply