புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சித்திரை மாதத்தில் தமிழகத்தில், மதுரை, ஈரோடு, அவிநாசி உள்ள பல்வேறு ஆலயங்களில் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா இன்று காலை தொடங்கியது.
இன்று காலை 10.05 மணிக்கு மேல் 10.29 மணிக்குள் மிதுன லக்னத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. சிவாச்சார்யார்களின் வேத மந்திரங்கள் முழங்க, கொடியேற்றம் நடந்தது. இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலையில் மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரரும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.
விழாவில் வரும் 15 ஆம் தேதி இரவு 8 மணிக்கு மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம்; 16 ஆம் தேதி திக்குவிஜயம்; முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி- சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் வரும் 17 ஆம் தேதி காலை 9.50 மணிக்கு மேல் 10.14 மணிக்குள் நடைபெறுகிறது. தேர்தல் வாக்குப்பதிவு நடக்கும் வரும் 18ஆம் தேதி காலை 5.45 மணிக்கு தேரோட்டமும், 19-ம் தேதி தீர்த்தம் மற்றும் தேவேந்திரர் பூஜையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
விழா ஏற்பாடுகளை கோயில் தக்கார் கருமுத்து தி.கண்ணன், கோயில் இணை ஆணையர் நா.நடராஜன் செய்து வருகின்றனர்.