செங்கல் சூளை அதிபர்களின் ஆட்டம்! கைகட்டி வேடிக்கை பாா்க்கும் கனிமவள அதிகாரிகளின் கூட்டம்!!

கோவை மாவட்டத்தில் துடியலூரை அடுத்துள்ள தடாகம்,சின்ன தடாகம்,வீரபாண்டி,நஞ்சுண்டாபுரம்,ஆனைகட்டி உள்ளிட்ட பகுதிகளில் கட்டிட வேலைக்கு பயன்படும் செங்கல் தயாரிக்கும் பணியில் 200 க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் ஈடுபட்டு வருகின்றன.அதற்கு தேவையான செம்மண் மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ள பட்டா நிலங்கள் மற்றும் இதர நிலங்களில் இருந்து ஜெ.சி.பி உள்ளிட்ட வாகனங்கள் மூலம் வெட்டியெடுக்கப்படுகிறது.இந்த நிலையில் பட்டா நிலமாகவே இருந்தாலும் அரசு அனுமதித்த அளவை விட அதிக ஆழத்தில் செம்மண் வெட்டி எடுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.அப்படி இருந்தும் தடாகம்,சின்ன தடாகம்,நஞ்சுண்டாபுரம்,ஆனைகட்டி உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் செங்கல் சூளைகள் அரசு அனுமதித்த அளவை விட அதிக ஆழத்தில் வெட்டி எடுப்பதால் இப்பகுதிகளில் மண் வளம் குறைவதோடு,காற்று மாசு ஏற்படுவதாகவும் வாகன ஓட்டிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.மேலும்,இப்பகுதியில் செயல்படும் செங்கல் சூளைகளில் இயக்கப்படும் வாகனங்கள் அதிவேகத்தில் இயக்கப்படுவதால் செம்மண் காற்றில் கலந்து ஆஸ்துமா போன்ற சுவாச நோய்களால் பாதிக்கப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.செங்கல் சூளைகளால் பொதுமக்கள் சுவாச நோய்கள் ஏற்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.அனுமதியின்றியும்,அனுமதிக்கப்பட்ட அளவை மீறியும்,பொது மக்கள் சுவாச பிரச்சினைகள் குறித்தும் இப்பகுதியில் வசிக்கும் மக்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கனிம வளத்துறைத்துறைக்கும் பல முறை மனு அளித்துள்ளதாகவும் அதுகுறித்து அத்துறை சார்பில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

பொதுமக்களின் வற்புறுத்தலின் பேரில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக வெட்டியெடுக்கப்படுவது குறித்து விசாரணை மேற்கொள்ள செல்லும் பொழுதே கனிம வளத்துறையில் பணிபுரியும் சில அதிகாரிகள் செங்கல் சூளை அதிபர்களுக்கு முன் கூட்டியே தகவல் தெரிவித்து விடுவதால் குற்றம் குறித்து முழுமையாக விசாரணை மேற்கொள்ளப்படுவதில்லை எனவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். செங்கல் சூளை நடத்தி வருபவர்கள் பெரும் பாலும் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் என்பதாலும்(,பெறுவதை பெற்றுக்கொண்டும்)கனிம வளத்துறை இவ்விஷயத்தில் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.தவறு செய்யும் செங்கல் சூளைகள் மீதும்,செங்கல் சூளை அதிபர்கள் ஆளுங்கட்சியாக இருந்தாலும்,எதிர்க்கட்சியாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்காவிட்டால் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.தூக்கத்திலிருந்து விழிக்குமா கனிம வளத்துறை ?


Leave a Reply